வாக்கு திருட்டில் சீக்கிரம் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்.. அதன் பிறகு மோடியை பாருங்க! ராகுல் காந்தி ஆவேசம்
பாட்னா: பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்த ஹைட்ரஜன் குண்டுக்கு இணையான தகவல்களைக் காங்கிரஸ் வெளியிடும் என்றும் அதன் பிறகு பிரதமர் மோடியால் மக்களையே எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மேலும், பாஜக வாக்குகளைத் திருடியே தேர்தல்களில் வெல்வதாகவும் அவர் விமர்சித்திருந்தார். ராகுலின் குற்றச்சாட்டுகள் அப்போதே நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

ராகுல் காந்தி பேச்சு
இதற்கிடையே வாக்கு திருட்டு புகாரை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் வாக்காளர் அதிகார யாத்திரையை பீகாரில் நடத்தி வருகிறார்கள். வாக்கு திருட்டு புகார் தொடர்பாக ஹைட்ரஜன் குண்டைப் போன்ற தகவல்களைக் காங்கிரஸ் வெளியிடும் என்றும் அந்தத் தகவல்கள் வந்த பிறகு பிரதமர் மோடியால் மக்களை எதிர்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
ஹைட்ரஜன் குண்டு
இது தொடர்பாக ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "பாஜக தலைவர்களே, அணுகுண்டை விடப் பெரிய ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் ஹைட்ரஜன் குண்டு. தயாராக இருங்கள், ஒரு ஹைட்ரஜன் குண்டு வருகிறது. மிக விரைவில் வாக்கு திருட்டு பற்றிய முக்கியமான உண்மை வெளிவரும். இந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்தவுடன், நரேந்திர மோடியால் நாட்டு மக்களை எதிர்கொள்ள முடியாது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்" என்றார்.
பாட்னாவில் "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் வாக்காளர் அதிகார யாத்திரையின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, "ஓட்டு திருடனே, பதவியில் இருந்து விலகு' என்ற முழக்கத்தை நான் எழுப்பினேன். இப்போது மக்கள் அதைப் பிடித்துக் கொண்டனர். எங்கள் குற்றச்சாட்டுகள் இப்போது இது சீனாவிலும் எதிரொலிக்கிறது.. அமெரிக்காவிலும் மக்கள் இதைப் பற்றிப் பேசுகிறார்கள்" என்றார்.
பாஜக பதிலடி
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஆளும் பாஜக தரப்பும் தேர்தல் ஆணையமும் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்தன. இருந்தாலும் இது இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சூழலில் தான் ஹைட்ரஜன் குண்டுக்கு இணையான தகவல்களைச் சொல்லப்போவதாகக் கூறி ராகுல் காந்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அதேநேரம் ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்தது. அவருடைய குண்டுகள் அனைத்தும் வெடிக்காத குண்டுகள் என்று சொன்ன பாஜக, அவரது குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் தேர்தல் ஆணையம் சொன்னது போல ராகுல் காந்தி ஏன் பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்திக்கு அச்சம்
பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், "அவர் அணுகுண்டு என்று அழைத்தது வெடிக்காத குண்டாக மாறியது. அணுகுண்டுகளுக்கும் ஹைட்ரஜன் குண்டுகளுக்கும் தேர்தல்களுக்கும் என்ன சம்பந்தம்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார். அவரது நடத்தை கண்ணியமாக இருக்க வேண்டும். அவர் சொன்னது உண்மை என்றால் பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதில் என்ன தயக்கம்? பொய் சொன்னால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் ராகுல் தயங்குகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications