"ஆம், இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது.. அதை அழித்ததே மோடி தான்!" பாய்ந்து வந்த ராகுல் காந்தி
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் செத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே டிரம்ப் இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டதாகச் சொன்னது உண்மை தான் என ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இந்தக் கருத்து, இந்திய அரசு மட்டுமே ஏற்க மறுக்கும் ஒரு உண்மையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை இந்த நிலைக்குத் தள்ளியதே மோடி தான் என்றும் அவர் விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உலக நாடுகளுக்கு வரிகளை விதிக்க ஆரம்பித்துவிட்டார். ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது வரிகளை விதிப்பேன் என அறிவித்திருந்தார். இந்தியா அமெரிக்கா இடையே பல மாதங்களாக வணிக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தாலும் ஒப்பந்தம் எதுவும் இறுதியாகவில்லை.

டிரம்ப் விமர்சனம்
இந்தச் சூழலில் தான் இந்தியா மீது 25% வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். ரஷ்யா இந்தியா வர்த்தகத்தையும் சுட்டுக்காட்டிய அவர், உக்ரைன் போரை ரஷ்யா தொடர்வதற்குச் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் என்றார். இதனால் இந்தியா கூடுதல் அபராதத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் செத்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
ராகுல் காந்தி
இதற்கிடையே டிரம்ப் சொன்னது சரி தான் காங்கிரஸின் ராகுல் காந்தியும் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "ஆம், டிரம்ப் சொல்வது சரிதான். பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைத் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்தியப் பொருளாதாரம் செத்துப் போய் விட்டது என்பதை அனைவரும் அறிவர். அதிபர் ட்ரம்ப் ஒரு உண்மையைக் கூறியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் முடங்கி இருப்பது உலகிற்கே தெரியும். சிலருக்கு உதவவே பாஜக பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
மோடி தான் அழித்தார்
மேலும், ராகுல் காந்தி இதே விமர்சனங்களைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் முன்வைத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்தியப் பொருளாதாரம் செத்துப் போய்விட்டது. மோடி அதை அழித்துவிட்டார். பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி, தோல்வியுற்ற 'அசெம்பிள் இன் இந்தியா' திட்டம், நசுக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் என மோடியால் இந்திய இளைஞர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லை" என்று அவர் பதிவிட்டார்.
டிரம்ப்
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 25% வரிகளை விதிப்பதாக அறிவித்தார். மேலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளைக் குறிப்பிட்டு ட்ரம்ப் இந்த வரிகளை அறிவித்தார். மேலும், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து தனக்குக் கவலையில்லை என்றும் இந்தியா, ரஷ்யா என இரு நாடுகளின் பொருளாதாரம் செத்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
டிரம்ப் இது குறித்துக் கூறுகையில், "இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்குக் கவலை இல்லை. அவர்கள் தங்கள் செத்துப்போன பொருளாதாரங்களை ஒன்றாக எடுத்துக் கொண்டாலும் சரி.. இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைவாகவே வணிகம் செய்துள்ளோம், அவர்களின் வரிகள் மிக அதிகம், உலகில் மிக உயர்ந்த வரி விதிப்புகளில் ஒன்றாகும்" என்று அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications