'சங்கிகள் அரசியல் காரணங்களுக்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்'.. பா.ஜ.க.வை தாக்கிய காங்கிரஸ் தலைவர்!
டெல்லி: வார்தாவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் அகில இந்திய காங்கிரஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ' இந்து மதம் ஒரு சீக்கியரை அல்லது முஸ்லிமை அடிப்பதா? இல்லை.. ஆனால் ஹிந்துத்துவா, நிச்சயமாக செய்யும்' என்று கூறினார்.
''இந்துத்துவா பற்றி எந்த வேத புத்தகத்திலும் குறிப்பிடவில்லை. நான் இதனை பார்த்ததில்லை. உபநிடதங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் ஹிந்துத்துவா குறித்து அதில் படிக்கவில்லை'' என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் கருத்து
ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக உடனடியாக பதிலடி கொடுத்தது. ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, 'காங்கிரஸ் கட்சி இந்துத்துவா மீது தாக்குதல் நடத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது. ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் சல்மான் குர்ஷித், சசி தரூர் மற்றும் ப சிதம்பரம் போன்ற தலைவர்கள் மதத்தை குறிவைத்துள்ளனர். மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் இந்து மதத்தை 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையால் அவமானப்படுத்துகின்றனர்' என்று சம்பித் பத்ரா கூறினார்.

மிகச்சரியதானது
இந்த நிலையில் இந்துத்துவா குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்து மிகச்சரியதானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.கே ஹரிபிரசாத் பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- பா.ஜ.க உருவாக்கிய விவகாரம் மிகவும் கேலிக்கூத்தானது. இந்துத்துவா மற்றும் இந்து மதம் குறித்து ராகுல் காந்தி கூறியது முற்றிலும் சரியானது.

மதம் சார்ந்தவர்கள் அல்ல
பா.ஜ.க.வோ அல்லது அதன் சங்க குடும்பமோ மதம் சார்ந்தவர்கள் அல்ல; ஏனென்றால் அவர்கள் நாத்திகராக இருந்த வீர் சாவர்க்கரைப் பற்றி ஒருபோதும் பேசியிருக்க மாட்டார்கள். ஒரு நாத்திகர் எப்படி மதத்தைப் பற்றி பேச முடியும்? சங்கிகள் அரசியல் காரணங்களுக்காக மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். பாரதிய ஜனதா தலைவர்கள் வீர் சாவர்க்கரை முழுமையாகப் படித்ததில்லை. இந்துத்துவா என்பது மதம் அல்ல, அது ஒரு அரசியல் சித்தாந்தம் என்றார் சாவர்க்கர்.

சுவாமி விவேகானந்தர்
ஹிந்துத்துவாவுக்கு எதிரானவர் என்றால் இந்து மதத்திற்கு எதிரானவர் என்று அர்த்தம் இல்லை. வீர் சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எம்.எஸ் கோல்வால்கர் மற்றும் கே.பி ஹெட்கேவார் ஆகியோர் இந்துத்துவாவைப் பின்பற்றினர். சுவாமி விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் இந்து மதத்தைப் பின்பற்றினர். இவ்வாறு பி.கே ஹரிபிரசாத் கூறினார்.












Click it and Unblock the Notifications