களங்கம் ஏற்படுத்துகிறீர்கள் ராகுல்.. சாவர்க்கர் பற்றி இந்திரா காந்தி சொன்னது என்ன தெரியுமா? அமித் ஷா
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சாவர்க்கர் பற்றி இந்திரா காந்தி கூறியதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் சாவர்க்கரின் பெயருக்கு ராகுல் காந்தி களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக வயநாடு எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

ராகுல் காந்தியின் கருத்து
இதனிடையே எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை. என் பெயர் காந்தி. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று தெரிவித்தார். சாவர்க்கர் பற்றி பல்வேறு தருணங்களிலும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சாவர்க்கருக்கு களங்கம்
இந்த நிலையில் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட தி ரைசிங் இந்தியா மாநாட்டில் அமித் ஷா கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், அவதூறு வழக்கு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க விருப்பவில்லை என்றால், அதனைத் தான் அவர் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் சாவர்க்கரின் பெயரை ராகுல் காந்தி களங்கப்படுத்தி உள்ளார்.

சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள்
இந்தியாவின் விடுதலைக்காக அதிக பாதிப்புகளை சந்தித்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் சாவர்க்கரும் ஒருவர். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் என்றால், அது சாவர்க்கர் மட்டும் தான். சாவர்க்கர் பற்றி ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்றால், அவரது பாட்டி இந்திரா காந்தி சாவர்க்கர் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சரத் பவார் மற்றும் சிவசேனா கட்சியினரும் ராகுலைப் போலவே, சாவர்க்கர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தபால் தலை வெளியிட்ட இந்தியா காந்தி
1980 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திரா காந்தி சார்பாக பண்டிட் பக்ளேவுக்கு எழுதப்பட்ட பதில் கடிதத்தில், 1980ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான வீர சாவர்க்கரின் எதிர்ப்பானது, நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்தியா நினைவுகூறும் சாவர்க்கரின் பிறந்தநாளைக் கொண்டாடும் திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். சாவர்க்கரை நினைவுகூறும் வகையில் 1966ஆம் ஆண்டு தபால் தலையை இந்திரா காந்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications