'இந்திராவின் பேத்தியே வருக!'.. ராகுல் கைவிடும் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டி?
டெல்லி: லோக்சபா தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்யவும் அத்தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை நிறுத்தவும் ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. ரேபரேலி தொகுதியில் 6,87649 வாக்குகள் பெற்றார் ராகுல் காந்தி. பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட 2,97619 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல்.

வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட மூத்த இடதுசாரித் தலைவர் ஆனி ராஜாவை விட 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி ஒரு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். இதனால் தமது குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ராகுல். வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யவும் ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கிறாராம்.
ரேபரேலி தொகுதியில் 1999-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக காங்கிரஸ்தான் வெற்றி பெற்று வருகிறது. 2004-ம் ஆண்டு சோனியா காந்திதான் ரேபரேலியில் வென்றும் வந்தார். தற்போதைய தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடவில்லை. ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். இதனையடுத்து வயநாடு மற்றும் ரேபரேலியில் ராகுல் காந்தி களம் கண்டு வாகை சூடியுள்ளார். இதனால்தான் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியை ராகுல் காந்தி தக்க வைக்க நினைக்கிறாராம். மேலும் உ.பி.யில் பாஜக மரண அடியை வாங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ரேபரேலி தம் வசம் இருக்கட்டும் என்பதும் ராகுலின் கணக்காம்.
இதனால் தாம் ராஜினாமா செய்யும் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் தங்கை பிரியங்கா காந்தியை களம் காண வைக்க விரும்புகிறாராம் ராகுல் காந்தி. பாட்டி இந்திரா காந்தி, தெலுங்கானாவின் மேடக் தொகுதியில் வென்று மரணிக்கும் போதும் அத்தொகுதி எம்பியாகவே உயிர் நீத்தார். கர்நாடகாவின் பெல்லாரியில் சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். தற்போது நேரு குடும்பத்தின் இளைய வாரிசான பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறக்கப்பட இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications