லாலுவால் மொத்தமாக சிக்கும் குடும்பம்? மகன் தேஜஸ்வி யாதவ், மகள்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு
லாலு பிரசாத் மத்திய அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை பெற்றவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலத்தை வாங்கி தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
டெல்லி: லாலு பிரசாத் யாதவ் மத்திய அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை பெற்றவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலம் பெற்று குடும்பத்தினர் பெயரில் எழுதி வைத்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி சிபிஐ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறையினர் லாலுபிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் துவங்கியவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரான இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல், முறைகேடு புகார்கள் உள்ளன. மாட்டு தீவன ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்தார். சமீபத்தில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

நிலம் வாங்கிய புகார்
இந்நிலையில் தான் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது சட்டத்துக்கு புறம்பாக நிலம் வாங்கியுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதாவது ரயில்வேயில் வேலை பெறுபவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலம் வாங்கி தனது குடும்பத்தினரின் பெயரில் பதிவு செய்துள்ளார். மேலும் இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

களமிறங்கிய அமலாக்கத்துறை
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் 14 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ராப்ரி தேவி மற்றும் லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை இன்று களத்தில் இறங்கி உள்ளது.

தேஜஸ்வி யாதவ் வீட்டில்
லாலு பிரசாத் -ராப்ரி தேவியின் மகன், மகள்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரகிறது. லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையை துவங்கி நடத்தி வருகின்றனர்.

மகள்களின் வீடுகளில்..
அதேபோல் லாலு பிரசாத் -ராப்ரி தேவியின் மகள்களான ராகினி யாதவ், சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்னாள் எம்எல்ஏ அபு டோஜனாவின் பாட்னா வீடு, புல்வாரி ஷெரிப்பின் வீடு உள்பட 15 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள், டெல்லி, ஜார்கண்ட்டின் ராஞ்சி, பீகாரில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications