காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. குட்டையை "குழப்பிய" ராஜஸ்தான் எம்எல்ஏக்கள்! விலகுகிறார் அசோக் கெலாட்?
டெல்லி: ராஜஸ்தானில் ஏற்பட்டு உள்ள அரசியல் குழப்பம் காரணமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் விலக முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.

சோனியா காந்தி
காந்தி குடும்பம் அல்லாத தலைமை வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சிக்குள் எழத் தொடங்கின. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப் பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பு மற்றும் அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாகவும் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை.

காங்கிரஸ் செயற்குழு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கூடியது. அதில், அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனுத் தாக்கல்
இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கிய நிலையில் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை புதிய தலைவராக்குவதே காந்தி குடும்பத்தின் திட்டம் என்று கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் எம்பி சசி தரூரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் இருக்கிறார்.

பேச்சுவார்த்தை
அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் சோனியா காந்தியை சந்தித்தும் பேசினர். இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தியை தலைவர் தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு அவர் உடன்படவில்லை. இதனை தொடர்ந்து அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார்.

ராஜஸ்தான் குழப்பம்
அசோக் கெலாட் தலைவராவது ஏறக்குறைய உறுதியான நிலையில், காங்கிரஸில் ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க வேண்டும் என்ற விதியால் அவர் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது. தேர்தலுக்கு முன்பாகவே ராஜஸ்தான் முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியது.

அரசியல் குழப்பம்
இதனால் அதிருப்தியடைந்த அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 82 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அவர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மக்கான் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கெலாட் ஆதரவாளரையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். ராஜஸ்தானில் தொடரும் இந்த அரசியல் குழப்பம் காரணமாக அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications