வங்கி நம்பரை மாற்றாமலேயே வங்கியை மாற்றி கொள்ளலாம்.. ரிசர்வ் வங்கி கொண்டு வரும் முக்கிய விதி
சென்னை: நம்மில் பெரும்பாலானோருக்குச் சேமிப்பிற்கு ஒரு வங்கி கணிப்பு, கடனை கட்ட ஒரு வங்கிக் கணக்கு, சம்பளத்திற்கு ஒரு வங்கிக் கணக்கு என ஏகப்பட்ட கணக்குள் இருக்கும். இதை எல்லாம் நிர்வகிப்பதே பெரும் தலைவலியாக மாறிவிடும். இதற்கிடையே வங்கி நம்பரை மாற்றாமல் வங்கிக் கணக்குகளை வங்கிகளுக்கு இடையே மாற்றிக் கொள்ளும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி தனது 'Payments Vision 2028' திட்டத்தை வெளியிட்டது. நாட்டின் நிதிச் சூழலை மாற்றியமைத்து, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் வங்கிக் கணக்குகளின் செயல்பாடு மற்றும் சர்வதேசப் பரிவர்த்தனைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் வரும்.

வங்கி கணக்கு
நமது நாட்டில் வாடிக்கையாளர்களால் கிட்டத்தட்ட வங்கி கணக்குகளை மாற்றவே முடியாது. சம்பளம், மானியங்கள், EMI-கள், காப்பீட்டுத் தொகைகள் எனப் பல விஷயங்கள் நமது வங்கிக் கணக்கு உடனேயே இணைந்திருப்பதால், ஒரு வங்கிக் கணக்கை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றவே முடியாது. இதனால் அப்படியே காலப்போக்கில் பல வங்கிக் கணக்குகள் வந்துவிடுகிறது. ஒவ்வொன்றுக்கும் நாம் ஆண்டுதோறும் பராமரிப்பு கட்டணம், டெபிட் கார்டு கட்டணங்களைச் செலுத்த வேண்டி இருக்கிறது.
பெரிய தலைவலி
இதுபோல பல வங்கிக் கணக்குகள் இருப்பதால் அதை டிராக் செய்வதே பொதுமக்களுக்குப் பெரிய தலைவலியாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் இதைச் சரி செய்ய ரிசர்வ் வங்கி புதிய 'பேமென்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்' (PaSS) தளத்தை உருவாக்குகிறது. இந்த தளத்தில் பொதுமக்கள் தாங்கள் கட்ட வேண்டிய அனைத்து கட்டணத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கவும், வங்கிகளுக்கு இடையே தடையின்றி மாற்றிக்கொள்ளவும் உதவும். அதாவது உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கில் சம்பள கணக்கு இருக்கிறது.. இன்னொன்றில் வீட்டு லோன் இஎம்ஐ, மற்றொன்றில் வாகன கடன் இஎம்ஐ எனப் பிரிந்து இருந்தால் அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.
புதிய வசதி
இந்த திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளை வங்கிகளுக்கு இடையே மாற்றிக் கொள்ளும் வசதியும் வரும் என தெரிகிறது. அதாவது இப்போது நாம் செல்போன் நம்பரை மாற்றாமலேயே மொபைல் நெட்வொர்க்கை (ஏர்டெல், ஜியோ) மாற்றிக் கொள்ள முடிகிறது. அதேபோல வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிப் பரிவர்த்தனைகளில் தடங்கலின்றி வங்கிகளை மாற்ற முடியும். இது அவர்களுக்கு அதிக கட்டுப்பாட்டையும் வழங்கும்.
இதுபோல பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை இது கொண்டுள்ளது. மேலும், விரைவான மற்றும் மலிவான சர்வதேசப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் சில முக்கிய பாயிண்டுகள் உள்ளன. இது எல்லை தாண்டிய கட்டணங்களில் உள்ள ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்பத் தடைகளை நீக்க ரிசர்வ் வங்கி அமைப்புகளை மறு ஆய்வு செய்கிறது.
சர்வதேச தரம்
மேலும், இந்தியா தனது பேமெண்ட் உள்கட்டமைப்பை G20 நாடுகள் நிர்ணயித்த சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக மாற்றுகிறது. வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் தாமதங்களை இது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வணிகங்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் நன்மை பயக்கும்.. வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் என்கிறார்கள்.
இந்த சீர்திருத்தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்குகிறது. மேலும், வங்கிகளுக்கிடையே போட்டியை அதிகரிக்கும். போட்டி அதிகரிக்கும்போது எப்போதும் வாடிக்கையாளர்களுக்கே அது நன்மையாக இருக்கும் சூழலில், இதிலும் நமக்கே அதிக நன்மை கிடைக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்!












Click it and Unblock the Notifications