ஒரு மில்லிகிராம் தான்.. ஆளே காலி! டாக்டருக்கு படித்துவிட்டு தீவிரவாதி போட்ட ரசாயன சதி திட்டம்
டெல்லி: ஓரிரு நாட்களுக்கு முன்னர், குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை, சீன மருத்துவ பட்டம் பெற்ற ஒருவர் உட்பட மூன்று பேரைக் கைது செய்தது. இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் 4 கிலோ ஆமணக்கு விதை கூழ் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம் இதை வைத்து ரேசின் என்ற கொடிய ரசாயன ஆயுதத்தை தயாரிக்க முடியும்.
இதனை எளிமையாக தயாரிக்க முடியும். வெறும் ஒரு மில்லிகிராம் விஷம் ஆளை கொல்ல போதுமானது. கைது செய்யப்பட்டவர்கள் இதை வைத்து பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக லக்னோவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம், டெல்லியின் ஆசாத்பூர் உள்ள வேளாண் உற்பத்தி சந்தை குழு, மற்றும் அகமதாபாத், நரோடாவில் உள்ள பழ சந்தை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கின்றனர். இந்த விஷத்தை மிக எளிமையாக தயாரித்துவிட முடியும் என்பதே இந்த விஷத்தை கட்டுப்படுத்துவதை சவாலானதாக மாற்றியிருக்கிறது.

ரேசின் என்றால் என்ன?
ரேசின் என்பது ஆமணக்கு விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை விஷமாகும். இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் எண்ணெய் உற்பத்திக்கு ஆமணக்கு பெருமளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக, ஆமணக்கு விதைகளில் 30% முதல் 60% வரை ஆமணக்கு எண்ணெய் இருக்கும், இதன் திடக்கழிவின் எடையில் 1% முதல் 5% வரை ரேசின் காணப்படும். இந்த விஷம் எப்படிப்பட்டது? எப்படி செயல்படும் என்பது குறித்து டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தேசிய விஷ தகவல் மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஒய்.கே. குப்தா விவரித்திருக்கிறார்.
விஷத்தின் தீவிரம்
"இந்த தாவரம் பரவலாகக் கிடைக்கிறது. விதைகளிலிருந்து விஷத்தைப் பிரித்தெடுப்பது ரொம்ப கஷ்டமான காரியம் எல்லாம் இல்லை. இருப்பினும், இந்த பொருள் மிகவும் ஆபத்தானது. உணவில் கலந்த 1 மில்லிகிராம் கூட உயிரை கொன்று விடும். இந்த விஷம் உடலுக்குள் போனவுடன் அது செல்களில் உள்ள ரைபோசோம்களுடன் இணைகிறது. ரைபோசோம்கள் என்பது மரபணுக் குறியீட்டைப் படித்து புரதங்களை உற்பத்தி செய்யும் சிறிய கட்டமைப்புகள்.
விஷம் ரைபோசோம்களுடன் இணைந்தவுடன், அது செல்களில் புரதத் தொகுப்பை நிறுத்திவிடும். விஷம் எந்த செல்களால் உறிஞ்சப்படுகிறது என்பதைப் பொறுத்து, ஒருவருக்கு பல உறுப்பு செயலிழப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.
ரேசின் உட்கொண்டால் என்ன நடக்கும்?
விஷம் என்று தெரிந்ததை யாரும் வேண்டுமென்றே உண்ண மாட்டார்கள். இருப்பினும் குழந்தைகள் ஆமணக்கு விதையை கடிக்க வாய்ப்புகள் உள்ளது. விதை மிகவும் கடினமானதாக இருப்பதால் எதுவும் நடக்காது. இருப்பினும், விதை கடிக்கப்பட்டாலோ அல்லது உடைந்தாலோ ரேசின் கசியக்கூடும். ரேசின் உட்கொள்ளும்போது கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு சில சமயங்களில் ரத்தம் கலந்தும் வரலாம். இத்துடன் குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மாயத்தோற்றங்கள், வலிப்பு, உறுப்பு செயலிழப்பு இறுதியாக மரணத்தையும் ஏற்படுத்தும்.
விஷ முறிவு மருந்து இருக்கிறதா?
ரேசின் விஷத்திற்கு எந்தவிதமான மாற்று மருந்தும் அல்லது குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை. அறிகுறிகளுக்கு ஏற்பவே சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஷத்தால் பாதிக்கப்பட்டவர் சீக்கிரமாக மருத்துவமனைக்கு வந்தால், விஷத்தை வெளியேற்ற வாந்தியை தூண்டலாம். வாந்தி எடுக்க வைத்து வயிற்றை சுத்தப்படுத்துவன் மூலம் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவமனைக்கு வருவதற்குள் விஷம் உடலில் உறிஞ்சப்பட்டிருக்கலாம். இது ஆபத்தானது" என்று கூறியிருக்கிறார்.
அதிக நச்சுத்தன்மை மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மை காரணமாக கடந்த காலங்களில் இது ராணுவத்திலும் பயன்படுத்த முடியும். முதலாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா இதை இரசாயனப் பொருளாக ஆய்வு செய்தது. ரேசினை ஆயுதமாக்கும் அடுத்த முயற்சி 1980 இல் மேற்கொள்ளப்பட்டது. மிக ஆபத்தான ரசாயன ஆயுதங்களின் பட்டியலில் ரேசின் முதலிடத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications