"6 மாதங்களாகும்" முட்டியில் தசைநார் கிழிந்துவிட்டது.. ரிஷப் பண்ட் உடல்நிலை பற்றி மருத்துவமனை தகவல்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் முட்டியில் தசைநார் கிழிந்துள்ளதால், காயத்தில் இருந்து குணமடைய 6 மாதங்களாகும் என்று ரிஷிகேஷில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டிற்கு, நெற்றியில் இரு வெட்டுகள், வலது முட்டியில் தசைநார் கிழிவும், வலது மணிக்கட்டு மற்றும் விரல்களிலும் கூட காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப நீண்ட காலமாகலாம் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சொந்த வேலை காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தனது பென்ஸ் காரில் பயணித்துள்ளார். ஓட்டுநர் இல்லாமல் தானாகவே ஓட்டிச் சென்ற ரிஷப் பண்ட், நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன் தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் தனது காரில் டெல்லி புறப்பட்டுள்ளார். நள்ளிரவில் புறப்பட்ட ரிஷப் பண்ட், மீண்டும் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே காரை ஓட்டி வந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
தேசிய நெடுஞ்சாலையில் மங்களார் - நார்சன் பகுதிக்கு இடையே வந்துகொண்டிருந்த போது, காலை 5.30 மணியளவில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியதால், எதிர்முனைக்கு பறந்தது. இந்த விபத்தால் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

சீட் பெல்ட் அணியவில்லை
இதனால் அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு வேகமாக குதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் காரில் சீட் பெல்ட் அணியவில்லை. ஜன்னலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பண்டிற்கு முதுகு, தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

என்னென்ன காயங்கள்?
ரிஷப் பண்ட் காயம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிஷப் பண்டின் நெற்றியில் இரு வெட்டுகள், வலது முட்டியில் தசைநார் கிழிவும், வலது மணிக்கட்டு மற்றும் விரல்களிலும் கூட காயம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முதுகிலும் சிராய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

6 மாதங்கள்
இந்த ரிஷப் பண்ட் காயம் குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், முட்டியில் தசைநார் கிழிந்த காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் குணமடைய 3 முதல் 6 மாதங்களாகும். அந்த காயம் கடுமையாக ஏற்பட்டிருந்தால், கூடுதல் காலமெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனம் செலுத்த 6 முதல் 8 மாதங்களாகும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் இருந்து விரைந்து குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications