பத்மஸ்ரீ ரோகித் ஷர்மா! ஹிட்மேனுக்கு மத்திய அரசு கொடுத்த கவுரவம்! ஹர்மன் ப்ரீத் கவுருக்கும் பத்மஸ்ரீ!
டெல்லி: 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலை, இலக்கியம், கல்வி, சமூகப் பணி, விளையாட்டு, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை பத்ம விருதுகளின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதுகளாகும்.
இவ்விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25 ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்காக நாடு முழுவதிலிருந்தும் 54 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில வாரியாகப் பார்க்கும் போது, மேற்கு வங்கத்திலிருந்து அதிகபட்சமாக ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து 13 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் தலா நான்கு பேருக்கும், அசாம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா இரண்டு பேருக்கும், திரிபுரா, புதுச்சேரி, நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், லடாக், கேரளம், ஹரியாணா, தில்லி, சண்டிகர், பிகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரைத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ள மறைந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படவுள்ளது. அதேபோல், பிரபல பாடகி அல்கா யாக்னிக்குக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகள் பட்டியலில் கலைப் பிரிவில் நடிகர் மாதவன் இடம்பெற்றுள்ளார். விளையாட்டுத் துறையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்புக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications