கங்கை நதியோரம், 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை தோட்டம்.. ரூ.4000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா அசத்தல்
டெல்லி: கங்கை நதியின் இரு புறங்களிலும் மூலிகை செடிகளை நடவு செய்யும் திட்டத்திற்காக, ரூ.4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பேக்கேஜ் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக நிருபர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.

அப்போது விவசாயத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கங்கை நதியின் இரு புறமும் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை செடிகளை நடவு செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுவதாக கூறினார் அவர்.
தற்போதைய சூழ்நிலையில், உலகளாவிய அளவில் மூலிகை பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்து, கங்கை நதி நீரை பயன்படுத்தி இவற்றை விளைவித்து சர்வதேச அளவில் சந்தைப் படுத்தும் திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் அந்த பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு, நோய் எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் அவர்கள் தற்சார்பு அடைய முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் குறைந்து வருவது பற்றி நாம் பேசியிருப்போம். தேன் கூடு விவசாயம் என்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. எனவே 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இரண்டு லட்சம் தேன்கூடு விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். மருத்துவம் உள்ளிட்ட விஷயங்களுக்கு தேன்கூட்டில் உள்ள மெழுகு பயன்படுகிறது. இதை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். ஒரு பக்கம் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் கிடைப்பதோடு, இந்த மெழுகு நமக்கு மருந்தாகவும் பயன்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications