எடப்பாடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. டெண்டர் முறைகேட்டு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து
டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பல நாட்களாக விசாரிக்கப்படாமல் இருந்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மிக முக்கிய துறையான இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பு தொடர்ந்து புகார் வைத்து வருகிறது.
இதையடுத்து 2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ் பாரதி புகார் வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.

சிபிஐ விசாரணை
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே இல்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. இதையடுத்து வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்தார்.

விசாரணை
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பல மாதங்களுக்கு பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆர். எஸ் பாரதி தாக்கல் செய்த புதிய பதில் மனுவில், இந்த புதிய மனுவில் சர்வதேச உலக வங்கி விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை எடப்பாடி பழனிசாமி மீறிவிட்டார். தனது நெருங்கிய உறவினர்களுக்கு சாலை ஒப்பந்தங்களை வழங்கி அவர் உலக வங்கி விதிகளை மீறிவிட்டார். இதனால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது.

சர்தேச விதிகள்
அதோடு எடப்பாடி சார்பாக இதற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி தனது உறவினர்களுக்கு குறைந்த விலையில் டெண்டர் கொடுத்ததாக புகார் உள்ளது. முக்கியமாக வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.

புகார் மேல் புகார்
அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் உள்ளது. அதேபோல் ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் . திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலையை விரிவாக்கம் செய்ய 720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.

சிபிஐ
சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications