கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இணைய இணைப்பு- செல்போன் சேவைகள் துண்டிப்பு, தலைவர்கள் கைது என பல்வேறு தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன.

இத்தடை உத்தரவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.வி. ரமணா, சுபாஷன் ரெட்டி மற்றும் கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- அனைத்து தடை உத்தரவுகளையும் ஒரு வார காலத்துக்குள் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தடை உத்தரவுகளையும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.
- 144 தடை உத்தரவின் கீழான ஆணைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வகை செய்யும் வகையில் வெளியிட வேண்டும்.
- இணைய சேவை துண்டிப்பை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- இணையசேவையை பயன்படுத்துவது என்பது அரசியல் சாசனத்தின் 19(1) பிரிவின் கீழ் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துகிற அடிப்படை உரிமைகளில் ஒன்று.
- இணையவழி வர்த்தகம் என்பது வர்த்தகம் செய்வதற்கான அடிப்படை உரிமையை உள்ளடக்கியது.
- உரிய காரணங்கள் தெரிவிக்காமலும் கால அவகாசம் தராமலும் இணைய சேவைகளை துண்டிக்கவும் முடியாது.
- அரசின் முடிவுகளுக்கு எதிராக கருத்துகளை தெரிவிப்பதை இணைய சேவையை முடக்குவதற்கு ஒரு காரணமாக கூறுவதை ஏற்கவும் முடியாது.
- மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்படுவதை ஒடுக்குவதற்காக 144 தடை உத்தரவை அமல்படுத்துவதையும் ஏற்க முடியாது.
- பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை கவனத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications