தோஹாவில் இந்திய தூதருடன் பேச்சு நடத்திய 'தாலிபான்' தலைவர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்!
டெல்லி: கத்தார் நாட்டின் தோஹா நகரில் இந்திய தூதர் தீபக் மிட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தாலிபான் அரசியல் பிரிவு தலைவரும் இந்தியாவின் 1979-82-ல் பயிற்சி பெற்றவருமான ஷேர் முகமது அப்பாஸ் என்கின்றன தகவல்கள்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. இதனை தாலிபான்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.
1996-ம் ஆண்டைப் போல அல்லாமல் இந்த முறை அனைத்து உலக நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்பதில் தாலிபான்கள் படுதீவிரமாக இருக்கின்றனர். உலக நாடுகளும் கூட தாலிபான்கள் தொடர்பான நிலைப்பாட்டில் மென்மை போக்கை காட்டி வருகின்றன.

தாலிபான்கள் நிலைப்பாடு
தாலிபான்கள், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக கூறியிருந்தனர். மேலும் பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை ஆப்கானிஸ்தானில் வெளிப்படுத்த வேண்டாம் எனவும் தாலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தாலிபான்களுக்கு பாகிஸ்தானும் சீனாவும் முழு ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பது பெரிய எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

தாலிபான்களும் மத்திய அரசும்
முன்னதாக டெல்லியில் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருந்தது. அதில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கூறியிருந்தார். அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், ஆப்கான் நிலைமை நமக்கு சவாலானதாக இருக்கும். இதுவரையிலான வியூகங்களை உத்திகளை இனி நாம் மாற்ற வேண்டியது இருக்கும் என்றார்.

தோஹா பேச்சுவார்த்தை
இந்நிலையில்தான் அதிகாரப்பூர்வமாக தோஹா நகரில் இந்திய தூதர் தீபக் மிட்டல் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானை இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; ஆப்கானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும். இந்தியாவிடம் தஞ்சம் கோரிய ஆப்கான் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இப்பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தாலிபான்களும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்திருந்தனர்.

இந்திய ராணுவத்திடம் பயிற்சி
இதனிடையே தோஹாவில் இந்திய தூதர் தீபக் மிட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் புதிய அதிபர் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்-க்கும் மிக முக்கியமான தொடர்பும் உள்ளது. 1979 மற்றும் 1982 கால கட்டங்களில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு நமது நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய ராணுவ அகாடமியில் ஆப்கான் வீரர்கள் தங்கி பயிற்சி பெற்றனர். அப்படி இந்திய ராணுவத்திடன் பயிற்சி பெற்றவர்களில் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஒருவர். பின்னர் ஆப்கான் ராணுவத்தில் இருந்து விலகி தாலிபான்களுடன் இணைந்து கொண்டார். ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று நேரடி பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார். தோஹாவில் உள்ள தாலிபான்களின் அரசியல் பிரிவு இவரது கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இத்தகைய பின்னணியில்தான் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் தாலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications