விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய காந்தியின் பேத்தி... போராட்டத்தில் உண்மை உள்ளது என நெகிழ்ச்சி
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடைபெறும் காசிப்பூர் போராட்ட களத்திற்குச் சென்ற காந்தியின் பேத்தி தாரா காந்தி. விவசாயிகள் போராட்டத்தில் உண்மை உள்ளதாலேயே ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடந்த 75 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து போராட்ட களங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக, காசிப்பூரில் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

காசிப்பூரில் காந்தியின் பேத்தி
இந்நிலையில், இன்று காசிப்பூர் போராட்ட களத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி சென்றிருந்தார். அங்குச் சென்று விவசாயிகளின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். 84 வயதான தாரா காந்தி தற்போது தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவராக உள்ளார். விவசாயிகள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று தெரிவித்த தாரா காந்தி, விவசாய சமூகத்தை அரசு முறையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போராட்டத்திற்கு ஆதரவு
இது தொடர்பாக விவசாயிகள் தாரா காந்தி கூறுகையில், "எந்த ஒரு அரசியல் சார்பான நிகழ்ச்சிக்காகவும் நாங்கள் இங்கு வரவில்லை. நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு உணவு அளித்த விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவே இன்று இங்கு வந்துள்ளோம். உங்களால்தான் நாங்கள் இன்று இங்கு இருக்கிறோம். விவசாயிகளுக்கு நன்மை நடந்தால், நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்மை நடக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் நலன்
விவசாயிகளுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ளவே காசிப்பூர் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "என்ன நடந்தாலும் விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விவசாயிகளின் கடின உழைப்பு குறித்து அனைவருக்கும் தெரியும். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் விவசாயிகளின் நலனில் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த நலனும் உள்ளது" என்றார்.

உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை 18 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.