பிரதமர் மோடியை யாரோ இயக்குகிறார்கள்.. பஞ்சாப் பிரசாரத்தில் ராகுல் காந்திக்கு வந்த சந்தேகம்
டெல்லி: பிரதமா் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது பின்னணியில் உள்ள சக்திகள் அவர்களை இயக்குகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆனால், பஞ்சாப் தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக களத்தில் இருப்பது ஆம் ஆத்மி கட்சி தான். இதனால் அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் காங்கிரசை சாடி பிரசாரம் செய்து வருகிறார்.

காங்கிரஸ்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியே மீண்டும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காங்கிரஸ் நட்சத்திரங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சனையால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது.

ஆம் ஆத்மி
டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறி, மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 21 லட்சத்துகும் அதிகமான ஓட்டுகள் பெற்று பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேர்வானார்.

ராகுல் காந்தி
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல்காந்தி பேசுகையில், ''பஞ்சாபில் ஆட்சி அமைக்க எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கும் ஆம் ஆத்மியை மக்கள் நம்ப வேண்டாம். ஆம் ஆத்மி கொடுக்கும் வாக்குறுதிகளைக் கேட்டு மக்கள் ஏமாளியாகவேண்டாம். அவா்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை சீரழித்துவிடுவாா்கள். அதேபோல பிரதமா் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது பின்னணியில் உள்ள சக்திகள் யாா் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அமைதி
பஞ்சாப் மாநிலத்துக்கு இப்போதைய தேவை அமைதிதான். எல்லோருக்கும் வாய்ப்புகொடுத்து பரிசோதிக்க இது சோதனைக்கூடம் கிடையாது. அமைதியை விரும்புபவர்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள். பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது பஞ்சாப். பஞ்சாப் சூழ்நிலைகளை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும்.

பாஜக
விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டுவந்தார் பிரதமர் மோடி. விவசாயிகள் கைகளில் இருந்து அவா்களது உரிமையைப் பறிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. இதற்காக பஞ்சாப் விவசாயிகள் டெல்லி வரை சென்று வாக்களித்தார்கள். இந்தியாவில் பெட்ரோல், டீசல் தினமும் ஏறி வருகிறது. தேர்தலுக்காக விலை உயராமல் இருக்கிறது. எரிபொருள் விலை உயா்வால் பயனடைந்தவா்கள் எல்லாரும் பிரதமர் மோடியின் நண்பர்கள். பிரதமர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் பல சக்திகள் உள்ளன'' என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications