காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்! சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு!
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். மறுபுறம் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி பணிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ், தரப்பிலிருந்து ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. கடந்த தேர்தலை விட இது அதிகமாகும். அதேபோல வட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாததால் பல்வேறு முக்கிய தலைவர்களை காங்கிரஸ் இழந்திருந்தது. மட்டுமல்லாது ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடம் ஆட்சியையும் பறிகொடுத்திருந்தது.
எனவே இந்த தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. பல்வேறு வியூகங்களை வகுத்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. இதற்கு முன்னர் எலியும் பூனையுமாக இருந்த ஆம் ஆத்மியை கூட காங்கிரஸ் ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தது. மிக முக்கியமாக எல்லா தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தாமல் எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்குமோ அந்த தொகுதியில் மட்டும் களமிறங்கியது.
அதேபோல எதிர்பார்த்ததை போல இதற்கு வெற்றியும் கிடைத்தது. கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.











Click it and Unblock the Notifications