அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்குகளில் செப்.9 முதல் விசாரணை- டெல்லியில் முகாம்
டெல்லி: தங்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருவரும் டெல்லியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அமைச்சர் கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஏற்கனவே டெல்லி சென்றுவிட்ட நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து விசாரணை நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆய்வு செய்வதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்குகள் விசாரணையும் நடைபெற்றது.

அமைச்சர்கள் விடுதலை தீர்ப்பு ரத்து: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்த இந்த வழக்குகளில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன் இருவர் மீதான வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
செப்டம்பர் 9 முதல் விசாரணை: இதனையடுத்து அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 9-ந் தேதி முதல் ஶ்ரீவில்லிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. இந்த விசாரணை தினமும் நடத்தப்பட வேண்டும் என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.
டெல்லியில் முகாம்: சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த மறு விசாரணை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். மற்றொரு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிற்பகல் டெல்லி சென்றடைகிறார். தமிழ்நாடு அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டெல்லியில் முகாமிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கு என்ன?:
- 2006-2011-ல் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
- கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சும், நண்பர் கேஎஸ்பி சண்முகமூர்த்தி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ44,56,067 மதிப்பில் சொத்து குவித்தனர்.
-2012-ம் ஆண்டு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டது.
- 2023-ம் ஆண்டு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரை ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
தங்கம் தென்னரசு மீதான வழக்கு என்ன?:
- 2006-2011-ல் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் தங்கம் தென்னரசு
- தங்கம் தென்னரசு, மனைவி மணிமேகலை வருமானத்துக்கு அதிகமாக ரூ76,40,000 சொத்து குவித்தனர் என்பது வழக்கு
-2012-ம் ஆண்டில் தங்கம் தென்னரசு மீது வழக்கு தொடரப்பட்டது.
-2022-ம் ஆண்டு தங்கம் தென்னரசுவை ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.












Click it and Unblock the Notifications