Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சதியுடன் வந்த ரணில்- இந்திய எல்லை தாண்டி இலங்கை மீனவர்கள் அரபிக் கடல் செல்ல அனுமதிக்க கோரினார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை மீனவர்களை இந்திய எல்லை தாண்டி அரபி கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்திய பயணத்தின் போது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இருநாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்தார். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து ரணில் உரையாடினார். இருதரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டது. மேலும் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Sri Lanka seeks passage for fishermen via Indian waters to Arabian Sea

ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணம் தொடர்பாக கொழும்பில் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி செய்தியாளர்களிடம் விவரித்தார். அமைச்சர் அலி சப்ரி நேற்று பேசியதை இலங்கை அரசு சார்பு ஊடகமான தினகரன் நாளேடு https://www.thinakaran.lk முழுமையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் (இலங்கை தமிழில்): இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம். மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும்.

எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால், அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். சீனாவைப் போலவே, அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

Sri Lanka seeks passage for fishermen via Indian waters to Arabian Sea

டெல்லியில் ரணில்: ஜனாதிபதி அண்மையில் இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, பல முக்கிய கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கருடன் கலந்துரையாடிய பின்னர், இந்தியாவின் தலைமை பாதுகாப்பு ஆலோசகருடனும் கலந்துரையாடப்பட்டது. அதன்பின், ஜனாதிபதி, இலங்கைத் தூதுக்குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொருளாதார நெருக்கடி: கடந்த காலத்தில் நாம் சந்தித்த பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எங்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது. நிதி நிவாரணம் வழங்கியதோடு குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்துவத்தையும் வழங்கியது. இந்தக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். அதற்கான இந்தியாவின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் இந்தியப் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

75 ஆண்டு ராஜதந்திர உறவு: மேலும், நமது இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நமது பொருளாதார, சமூக மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முதலீடுகள் தேவைப்படுவதுடன் அந்த முதலீடுகளின் ஊடாக சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்பட்டால், இரு நாடுகளும் பெரும் நன்மைகளைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி தனியார் துறைகளுக்கிடையிலும் உடன்பாடுகளை எட்டுவதற்குத் தேவையான பின்னணி குறித்து ஆராயப்பட்டது.

இந்திய ரூபாய் பயன்பாடு: இந்திய ரூபாயை இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான ஏற்பாடுகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் பணத்தை ஏனைய நாணய அலகுகளுக்கு மாற்றாமல் எளிதாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும். இந்தியாவும் சிங்கப்பூரை இவ்விதம் கையாண்டு இரு நாடுகளும் பெரும் பயன்களை அடைந்துள்ளன.

துறைமுக உறவுகள்- சேவைகள்: மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிகச் சிறந்த உறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம். இப்போது இந்தியாவிற்கும் பலாலி விமான நிலையத்திற்கும் இடையில் தினசரி விமான சேவைகள் உள்ளன. எதிர்காலத்தில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ள்ளோம். மேலும், உள்நாட்டு விமான சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம். சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் சுற்றுலா கப்பல் சேவையை (Cruise Tourism) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இது இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு துறையாக இருப்பதுடன், இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இன்று தென்னிந்தியப் பிராந்தியம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை, இலங்கைக்கு பயனளிக்கும் வகையில், துறைமுகங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கண்டுள்ளனர். துறைமுகங்களுக்கு இடையே இந்த உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும். இது குறித்து கலந்துரையாடி விடயங்களை ஆராய்ந்து தீர்மானத்திற்கு வருவது குறித்து தலைவர்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தனர். இவ்விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விரிவாக கலந்துரையாடிய பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானிப்பதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

ஒப்பந்தங்கள்: இந்நாட்டு விவசாயத்திற்காக தொழில்நுட்ப அறிவைப் பெறுவது மிகவும் முக்கியம். கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். இன்று இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கு இந்தியாவிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளை பெறுவது குறித்தும் நாம் ஆராய்ந்தோம். மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், இந்திய முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு அவசியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மலையகத் தமிழர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்கள் இந்நாட்டிற்கு வந்து சுமார் 200 வருடங்கள் கடந்துள்ளன. அவர்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் அதற்காக 750 மில்லியன் இந்திய ரூபாயை முதலீடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளது. அத்துடன், நுவரெலியா பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது குறித்தும், அது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் இலங்கை மீனவர்களுக்கு அனுமதி?: அத்துடன் மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வடக்கில் இழுவைப் படகுகளை கொண்டு மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். இலங்கை மீனவர்களுக்கு இந்திய எல்லையைத் தாண்டி அதற்கு அப்பால் செல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இரு தரப்பினரும் ஒன்றிணைந்து தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் எதிர்பார்க்கின்றோம். இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதையும் பாதுகாப்பான வலயமாக எவ்வாறு பராமரிப்பது மற்றும் பரஸ்பர பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத விடயங்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு அலி சப்ரி தெரிவித்ததாக தினகரன் நாளேடு (https://www.thinakaran.lk/ செய்தி வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+