சீனாவின் 'காம்ரேட்'..இந்தியாவை கடுமையாக எதிர்ப்பாரா? இலங்கை புதிய ஜனாதிபதி அனுர என்ன செய்வார்?
டெல்லி: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 'கம்யூனிஸ்ட்' அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். தேர்தலுக்கு முன்னரே இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு மத்திய அரசால் ஆதரவு தெரிவிக்கப்பட்டவராக இருந்தாலும் அனுர குமார திசநாயக்கவின் இயல்பான, கம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கான ஆதரவு போக்குதான் பெரும் கேள்விக்குறியாகிறது. அதேபோல ஈழத் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வும் பவுத்த பிக்குகள் பேராதரவு பெற்ற சிங்களப் பேரினவாதியான அனுர குமார திசநாயக்கவிடம் இருக்குமா? என்கிற அச்சமும் உருவாகிறது.
ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கடும் இழுபறி, 2-வது விருப்பு வாக்கு எண்ணிக்கையை அடுத்து அதிகாரப்பூர்வமாக தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திசநாயக்க வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவை 6 மாதங்களுக்கு முன்னரே டெல்லி யூகித்திருந்தது. இதனால் அனுர குமார திசநாயக்க டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு மிக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்தான் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் அனுர சந்தித்து உரையாடி இருந்தார்.

முடிந்த ராஜபக்சேக்கள் அத்தியாயம்: இலங்கையில் வலதுசாரிகளான ராஜபக்சே குடும்பம், தற்போதைய ஜனாதிபதி ரணில் தரப்பால் அனுபவித்த பொருளியல் நெருக்கடிகள், விலைவாசி உயர்வு ஆகியவை மிக கடுமையான ரணத்தையே உருவாக்கி இருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ரணில், ராஜபக்சே தரப்புக்கு இனி இலங்கை அரசியலில் இடம் இருக்குமா? என்பது சந்தேகமே.
இடதுசாரி ஜனாதிபதி: தற்போது ஜனாதிபதியாகும் அனுர குமார திசநாயக்க, ஒரு மார்க்சிஸ்ட். இலங்கையில் ஏற்கனவே சீனா தமது விரிவாக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இலங்கைக்கு பெரும் கடனுதவி வழங்கு புதிய புதிய சுயாட்சி நகரங்கள் பலவற்றை அமைத்து வருகிறது. சிங்களர் பகுதியில் சீனாவின் கைதான் ஓங்கி நிற்கிறது. இதேபோல வடக்கில் இந்தியாவின் கை ஓங்குவதை சீனா ரசிக்கவில்லை. இந்தியாவுக்கு போட்டியாக வடக்கு கிழக்கில் தமிழர்களிடையே ஊடுருவ சீனா தொடர்ந்து முயற்சிக்கிறது. இலங்கை தீவில் இந்தியாவும் சீனாவும் மேலாதிக்கம் செலுத்துவதில் முனைப்பாகவே இருக்கின்றன. இருநாடுகளின் பிராந்திய நலன்களுக்கான இந்த போட்டியில் இலங்கை வசமாக சிக்கித்தான் இருக்கிறது.
யார் பக்கம் அனுர?: இதனால் கம்யூனிஸ்ட் அனுர குமார திசநாயக்க, இந்தியா-சீனா யார் பக்கம் நிற்பார் எனில் சீனாவுக்குதான் அதிக முன்னுரிமை தருவார்.. அதேநேரத்தில் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். இலங்கை ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அனுர குமார திசநாயக்க, இலங்கையில் எந்த ஒரு அன்னிய சக்தியும் காலூன்ற இடம் தரமாட்டோம் என்பதுதான் தமது வாக்குறுதியாக இந்தியாவுக்கு தரப்பட்டது என்கிறார். இந்திய தரப்பும் கம்யூனிஸ்ட் என்பதாலேயே கடும் போக்குடன் அனுராவிடம் நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனெனில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தியா தமது செல்வாக்கை தொடர்ந்து செலுத்தவே முயற்சிக்கும். சிங்களப் பேரினவாத சிந்தனை அனுரவிடம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியுமா என்பதும் கூட கேள்விக்குறிதான் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications