பிஎம்ஸ்ரீ திட்டத்தில் ஸ்டாலின் கையெழுத்து போட இருந்தார்.. சூப்பர் முதல்வரால்தான் யூடர்ன்: பிரதான்
டெல்லி: பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு யூடர்ன் அடித்துள்ளது, தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். முதலில் கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தில் கையெழுத்திட தமிழக முதல்வர் ஒப்புக்கொண்டார். ஆனால் சூப்பர் முதல்வர் ஆலோசனைக்கு பிறகு இந்த திட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் யூடர்ன் அடித்துவிட்டது என்றும் அந்த சூப்பர் முதல்வர் (Super CM) யார் என்று திமுக எம்பி கனிமொழி பதில் கூறுமாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை நடக்கிறது.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தமிழக எம்பி, தமிழச்சி பாண்டியன் மும்மொழி கொள்கை குறித்து பேசினார். தமிழகத்திற்கு கல்வி நிதி எதன் அடிப்படையில் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை வஞ்சிக்கிறது. மாணவர்களின் கல்வியில் இழிவான அரசியலை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசின் இந்த அரசியலால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. முதலில் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புக்கொண்ட தமிழக அரசு கடைசி நேரத்தில் யூடர்ன் அடித்துள்ளது.
முதலில் இந்த திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட இருந்தார். ஆனால் சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்ட கடைசி நேரத்தில் தமிழக முதல்வர் இதில் கையெழுத்திடாமல் பின்வாங்கி விட்டார். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை திமுக எம்பி கனிமொழி கூற வேண்டும் என்று கூறினார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும் போது திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மாறி மாறி திமுக, பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மதியம் 12 மணி வரைஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதில் அளித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில், மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது. மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்பதாக ஒருபோதும் கூறியதில்லை. திமுக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று சொல்லியது என்னை புண்படுத்தியது. தமிழக அரசுக்கான நிதியை கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்பதாக தமிழக எம்பிக்கள் ஒரு போதும் கூறியதில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications