இந்திய கடற்படைக்கு அசுர பலம்.. ரூ.63,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லி: இந்திய கடற்படைக்கு ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் - இந்தியா இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை விமானப்படைக்கு வாங்கிய நிலையில் தற்போது கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து இந்தியா ரஃபேல் விமானங்களை ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில், 36 ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, கடற்படைக்கும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தியது. இதையடுத்து, ரூ.63,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.

26 ரஃபேல் போர் விமானங்கள்
இதில் 22 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களாகவும், இரண்டு இருக்கை கொண்ட 4 போர் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டது. 2023 ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் பிரான்சிடம் இருந்து கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாகும்.
பிரான்சிடம் இருந்து கடற்படை பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களையும், அதனுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் வாங்க அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒப்பந்தம் கையெழுத்தானது
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.63, 000 கோடி மதிப்பில் பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், 26 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த விமானங்கள் அனைத்தும் 2031 ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளவாட உதவிகள், வீரர்களுக்கான பயிற்சி, பராமரிப்பு உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
500 கிலோ எடை அதிகம்
இந்த ரஃபேல் போர் விமானத்திற்கும் ஏற்கனவே உள்ள ரஃபேல் போர் விமானத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அதாவது, விமானம் தாங்கி கப்பலில் இருந்து செல்லும் விதமாக ரஃபேல் கடற்படை போர் விமானம் தயரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடற்படை விமானத்தின் எடை 10,600 கிலோ ஆகும். இது விமானப்படை ரஃபேல் போர் விமானத்தை விட 500 கிலோ அதிகம். இந்த விமானத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications