ஜூலை 31 வரை தான் டைம்.. அதுக்குள்ள 'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்டத்தை அமல்படுத்துங்கள்.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களும் 'ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை' அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதில் ஊரடங்கால் பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு & பணம் கொடுத்து தேவையான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நடவடிக்கை தேவை
அப்போது கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களின் நலனைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது. அமைப்புசாரா ஊழியர்களுக்கு எனத் தனியொரு போர்ட்டல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜூலை 31 கெடு
இதற்குத் தேவைப்பட்டால் தேசிய தகவல் மையத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், கொரோனா பாதிப்பு குறையும் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக சமையலறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உணவு தானியங்கள்
கொரோனா பாதிப்பு இருக்கும் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என்றும் இதற்குத் தேவையான தானியங்களை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முறையாக ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் மூலம் ரேசன் அட்டைதாரர் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ரேசன் பொருட்களைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications