செந்தில் பாலாஜி வழக்கு: ஆளுநர் தாமதமே காரணம்.. சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன தமிழக அரசு.. பரபர ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதல் தாமதம் ஆவதே காரணம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆவணங்களின் நகல்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பு விவரங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தது. கடைசியாக ஜாமீன் கோரிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

senthil balaji supreme court enforcement directorate

இதற்கிடையே, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேண்டுமென்றே விசாரணையை தொடங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி, ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய 73 அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதுதொடர்பான கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என தெரிவி்க்கப்பட்டது.

அப்போது மனுதாரர் ஒய்.பாலாஜி தரப்பில், இந்த வழக்கில் நடவடிக்கைக்கு அனுமதி என்பது தேவையில்லாத ஒன்று. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு என்பதால் தமிழக அரசின் போலீசார் விசாரணையைத் தொடங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர் என குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் என யாரையும் நியமிக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே செந்தில் பாலாஜி உள்ளி்ட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய குறுகிய கால அவகாசத்துக்குள் அனைத்து நடைமுறைகளையும் முடித்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இசைவு கொடுத்துவிட்டால் உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அமலாக்கத் துறை தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும், இந்த வழக்கில் இரு தரப்புக்கும் பொதுவான நடுநிலையான ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும் என கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "அரசு வழக்கறிஞரை மாற்ற வேண்டும் எனக் கோரினால் அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக முறையிடலாம். 22 ஆண்டுகளாக அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்து வரும் ஒருவரை மாற்ற வேண்டும் என எப்படி கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், செந்தில் பாலாஜி மீதான விவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் சமர்ப்பி்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் புதிதாக யாரையும் நியமிப்பதாக இருந்தால், அந்த அரசு சிறப்பு வழக்கறிஞரின் பெயரையும் விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+