கேரளா: மீடியா ஒன் சேனலுக்கு விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்! மத்திய அரசுக்கு சரமாரி குட்டு!
டெல்லி: கேரளாவின் மீடியா ஒன் டிவி சேனலுக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவின் மீடியா ஒன் டிவி மலையாள செய்தி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Madhyamam Broadcasting Ltd நிறுவனத்தின் மீடியா ஒன் சேனலுக்கு 10 ஆண்டுகால ஒளிபரப்பு உரிமம் வழங்கியது மத்திய அரசு. இந்த ஒப்பந்தம் 2021 செப்டம்பர் மாதம் காலாவதியானது. முன்னதாக உரிமத்தை புதுப்பிக்க கோரியிருந்தது மீடியா ஒன் சேனல். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்காமல் சேனல் ஒளிபரப்புக்கு தடை விதித்தது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக கேரளா உயர்நீதிமன்றத்தில் மீடியா ஒன் சேனல் ஆசிரியர் பிரமோத் ராமன் சார்பில் முதலில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றமானது, நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது; ஆகையால் மீடியா ஒன் குழுமத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்வதாக தெரிவித்தது.

கேரளா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மீடியா ஒன் சேனல் மற்றும் கேரளா பத்திரிகையாளர்கள் சங்கம் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இவ்வழக்கில் இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கேரளா உயர்நீதிமன்றத்தின் கருத்தை விமர்சித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து கருத்துகளை முன்வைத்தது. அதாவது நட்டின் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கேரளா உயர்நீதிமன்றம் நியாயப்படுத்தியதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும் தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கவும் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் ஊடகங்களின் பணிகளை அனுமதிக்க வேண்டிய அவசியத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இறுதியாக மீடியா ஒன் செய்தி சேனலுக்கு மத்திய பாஜக அரசு தடையை நீக்கியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும் பத்திரிகைகள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்க முடியாது; ஒரு செய்தி நிறுவனத்தை முடக்க அரசாங்கத்தை விமர்சித்தனர் என்ற காரணம் போதுமானதும் கிடையாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு குட்டு வைத்தனர்.












Click it and Unblock the Notifications