ஒரே கேள்வி.. பாசமாக வளர்க்கப்படும் காளைகள்..ஜல்லிக்கட்டை நடத்தலாமா? பீட்டாவிடம் கேட்ட உச்சநீதிமன்றம்
டெல்லி: பீட்டா வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் காளைகள் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் இறுதி கேள்வியாக உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2011ல் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது.
இந்த தடைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2017ல் சென்னை மெரினா கடற்கரையில் பெரியளவில் போராட்டம் நடந்தது. இதையடுத்து அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டத்தை இயற்றியது.
காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டா? ஏற்கவே முடியாது.. பீட்டா பரபர வாதம்.. உச்சநீதிமன்றம் சுளீர் கேள்வி

ஜல்லிக்கட்டு வழக்கு
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது வரை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அவசர சட்டத்துக்கு தடைக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. மேலும் கர்நாடகாவில் நடத்தப்பட்டு வரும் கம்பளா எனும் எருது விடும் போட்டிக்கு தடைகோரியும் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வருகிறது.
இன்று காலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

பீட்டா சார்பில் வாதம்
அப்போது பீட்டா சார்பில் ஷ்யாம் திவான் வாதிட்டார். ‛‛பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றி இருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது. மேலும் காளைகளை பாதுகாப்பதாக கூறி அவசர சட்டம் வாயிலாக காளைகளை வீரர்களுக்கு மத்தியில் போராட வைப்பது கொடூரமானது. காளையை வளர்ப்பது நல்லது விஷயம் தான். ஆனால் காளைகளை கொடுமைப்படுத்தக்கூடாது. விதிகள், சட்டங்கள் இருந்தாலும் கூட அதனை முழுமையாக பாதுகாப்பானதாக நடைமுறைப்படுத்த முடியாது'' என்றார்.

நீதிபதிகள் கருத்து
வாதங்களை கேட்ட நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் அமர்வு சில கருத்துகளை தெரிவித்தனர். அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்காக புதிதாக சட்டம் உள்ளது. வழிமுறைகள் உள்ளது. கலெக்டர் கண்காணிப்பு செய்கிறார். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை. முறையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பிறகு தான் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இறுதி கேள்வி இதுதான்
பல ஆண்டுகாலமாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும், மிகுந்த பாசத்துடன் காளைகள் வளர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டை கொடூரமானதா என அனைவரும் கூறுவார்களா?. இருப்பினும் காளைகளை கொடுமைப்படுத்தப்படும் செயல்களை அனுமதிக்க முடியாது. தற்போது விதிமீறல் இருப்பதாக தெரியவில்லை. எங்களை பொறுத்தமட்டில் ஜல்லிக்கட்டை எந்த வடிவத்திலாவது நடத்தலாமா? அல்லது நடத்தவே முடியாதா? என்பது தான் இறுதிக்கேள்வியாக உள்ளது'' எனக்கூறி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.