காமெடி பண்ணுறீங்களா? இப்படி ஒரு உத்தரவா? ஆந்திர எம்எல்ஏ வழக்கில் ஹைகோர்ட்டை விளாசிய உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஆந்திர சட்டப்பேரவை மற்றும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து இவிஎம் இயந்திரத்தை உடைத்த வழக்கில் அவரை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்தார். இந்த உத்தரவை கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த மே 13 ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற போது சில இடங்களில் ஆந்திராவில் வன்முறையும் ஏற்பட்டது. குறிப்பாக பல்நாடு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த தொகுதி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து இவிஎம் இயந்திரங்களை தூக்கி வீசினார்.

இது தொடர்பான காட்சிகள் நாடு முழுவதும் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், ராமகிருஷ்ண ரெட்டி தலைமறைவானார். அவர் முன் ஜாமீன் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், ராமகிருஷ்ண ரெட்டிக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் நம்பூதிரி ஷேஹாரி ராவ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அமர்வு முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
இதுபோன்ற வழக்குகளில் எப்படி இடைக்கால நிவாரணம் அளிக்க முடியும். நாங்கள் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை என்றால் அமைப்பை கேலிக்கூத்தாக்குவது போல அமையும். எங்களை கேலிக்குள்ளாக்குகிறீர்களா? வாக்குச்சாவடிக்குள் எப்படி இத்தனை பேர் போக முடியும்? நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
9ல் 7 தொகுதிகளில் கிளீன் ஸ்வீப்.. கொங்கு இனிமேல் திமுக கோட்டை.. அதிமுக, பாஜக அவுட்.. தந்தி கணிப்பு
இவிஎம் மற்றும் விவிபாட் பறிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் 8 பேர் இருந்துள்ளனர். இதில் ஜாமீன் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது. இடைக்கால உத்தரவு வரும் வரை எம்.எல்.ஏ தலைமறைவு ஆக இருந்துள்ளார். போலீசாரின் செயல்பாடும் அதிர்ச்சி அளிக்கிறது.
குறிப்பிட்ட அந்த வேட்பாளர் அமைப்பை சிறுமை படுத்தியுள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏ வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி வீசியுள்ளார். ஆனால் அடையாளம் தெரியாத நபர் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என காட்டமாக கூறினர். வரும் 6ம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications