நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் விசாரணைக்கு எதிரான அதிமுக வளர்மதி வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தாம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்யும் விசாரணைக்கு தடை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
2001-2006-ம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் வளர்மதி. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வளர்மதியும் அவரது குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் வளர்மதி, அவரது குடும்பத்தினரை சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு விடுவித்தது.

சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து -சூமோட்டாவாக மறு ஆய்வு செய்து விசாரித்து வருகிறார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வளர்மதி வழக்குத் தொடர்ந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தாக்கல் செய்த இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான பெஞ்ச் அண்மையில் விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் இதேபோன்ற வழக்கில் (அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கில்) சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதில் மனுத் தாக்கல் செய்வதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரியிருந்தார். இதனால் இந்த வழக்கு இன்றைய தேதிக்கு (பிப்ரவரி 6) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி கிடைக்கும் முன்னரே அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் விடுதலை வழக்குகளின் தீர்ப்புகளை தாமாகவே முன்வந்து மறு ஆய்வு விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், முன்னாள் -இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பது யார் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே முடிவு செய்யலாம்? தலைமை நீதிபதி தாமே விசாரிப்பதா? அல்லது எந்த நீதிபதி முன்பாக பட்டியலிடுவது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான இன்றைய வழக்கு விசாரணையிலும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சுட்டிக்காட்டப்படக் கூடும். இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவைப் பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications