அடுத்த கச்சேரி ரெடி.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு நவ.10-ல் விசாரணை!
டெல்லி: மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருக்கும் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கும் விசாரிக்கப்படுடுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி வகித்தவர் பன்வாரிலால் புரோஹித்.

பஞ்சாப் அரசு வழக்கு: பஞ்சாப் மாநில சட்டசபையில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் இதில் 5 மசோதாக்களுக்கு மட்டுமே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்திருந்தார். எஞ்சிய 22 மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர் புரோஹித். மேலும் பண மசோதாக்களை சட்டசபையில் தாக்கல் செய்யவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முட்டுக்கட்டை போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசு வழக்கு: இதேபோல தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 30-ந் தேதி வழக்கு தொடர்ந்தது. இதேபோல கேரளா முதல்வர் ஆரிப்கானுக்கு எதிராக கேரளா மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இல்லை. ஆளுநர்கள் மசோதாக்கள் மீது மாநில அரசுகள் நீதிமன்றத்துக்கு வரும் முன்னரே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுநர்கள் மசோதாக்கள் மீது அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும் என கூறினார் தலைமை நீதிபதி சந்திரசூட். மேலும் இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்: இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசின் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இன்றைய பஞ்சாப் வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு- கேரளா- தெலுங்கானா அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால் நவம்பர் 10-ந் தேதியன்று தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications