சிசோடியாவை தொடர்ந்து பிஆர்எஸ் கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சியுமான கவிதாவின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இதே வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுதலையான நிலையில் கவிதாவுக்கும் ஜாமீன் கிடைக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை பெரும் சர்ச்சையானதால் அது திரும்பப் பெறப்பட்டது. இந்த மனுபான கொள்கை அறிவிப்பில் பெரும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் ஆதாயம் அடையும் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கு தொடர்பிருப்பதால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 17 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுதலையானார்.
இதனால் இதே வழக்கில் சிறையில் இருக்கும் கவிதாவுக்கும் உச்சநீதிமன்றம் நாளை ஜாமீன் வழங்கக்க் கூடும் என்பது எதிர்பார்ப்பு. தெலுங்கானாவில் கவிதாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications