யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் முதலிடம் பிடித்தார் சிவசந்திரன்! நான் முதல்வன் திட்ட மாணவர்!
டெல்லி: மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவசந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23 ஆவது இடத்தை பெற்றுள்ளார். அது போல் தமிழகத்தில் முதலிடத்தை தேர்வாகியுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவுத் துறை), ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் (வனத் துறை) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளை கொண்டது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் நிலைத் தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வும், இந்த ஆண்டு ஜனவரி- ஏப்ரல் வரை நேர்காணலும் நடந்தது.
தேர்வு முடிவுகள்
அவ்வாறு நடந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வு எழுதியவர்களில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சக்தி துபே என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும் டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
சிவசந்திரன்- 23 ஆவது இடம்
அது போல் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 23 ஆம் இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து படித்தார். அவரை போல் நான் முதல்வன் திட்டத்தில் படித்த 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மோனிகா 39ஆவது இடம்
அது போல் தேசிய அளவில் 39ஆவது இடத்தை பெற்ற மோனிகாவும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்தவர். அதேபோல் https://upsconline.gov.in/FR-CSM-2024-Engl-220425.pdf என்ற இணைப்பில், தேர்வானவர்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
1,129 காலிப்பணியிடங்கள்
கடந்த ஆண்டு யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கையில் இந்தத் தேர்வு மூலம் 1,129 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இந்திய நிர்வாக சேவையில் (ஐஏஎஸ்) 180 பதவிகளும் இந்திய வெளியுறவு சேவையில் 55 பதவிகளும், இந்திய காவல் சேவையில் 147 பதவிகளும் அடங்கும்.
1009 தேர்ச்சி
மொத்தம் தேர்வான 1009 பேரில் 335 பேர் பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 109 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 318 பேரும், தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 160 பேரும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 87 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் வழித் தேர்வு
தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் காமராஜ், சங்கரபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழு நேர பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
நான் முதல்வன் திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவி செய்தல், தொழில் முனைவோராக மாறுவதற்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மேலாண் இயக்குநராக இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications