தெலுங்கானா: கேசிஆருக்கு எதிராக டெல்லியில் கார்கே தலைமையில் காங்கிரஸ் வியூகம்- சுனிலும் பங்கேற்பு!
டெல்லி: தெலுங்கானா சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் வகுக்க டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் கால் பதிக்க முடியாதா என கணக்குப் போட்டு காத்திருக்கிறது பாஜக. இதனிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் 35-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸில் இணைந்தனர்.

இந்த பின்னணியில் தெலுங்கானா தேர்தல் வியூகம் தொடர்பாக டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். இந்த கூட்டம் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த ஆலோசகர் சுனிலும் பங்கேற்றார்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான மாணிக்கம் தாகூர், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்தோம். தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரது கருத்தையும் உன்னிப்பாக மேலிடத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் எதிராக மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர். மக்கள் பணத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு சூறையாடிவிட்டது. சந்திரசேகர ராவும் அவரது குடும்பமும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதனால்தான் தெலுங்கானா மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றார்.
மேலும், தெலுங்கானா மக்களின் கோரிக்கையை ஏற்று தனி தெலுங்கானா மாநிலத்தை கொடுத்தவர் சோனியா காந்தி. அம்மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்ட வளர்ச்சி ஏற்படும் என்பதால் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளாகியும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகியும் வீடு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications