பொருளாதார பைல் இல்ல..நீர்ப்பாசன பைல் இல்ல ”தி காஷ்மீர் பைல்ஸ்” மட்டும் எதற்கு..பொங்கியெழுந்த கேசிஆர்
டெல்லி : மத்திய அரசிடம் பொருளாதாரம் குறித்தோ, நீர்ப்பாசனம் குறித்தோ பைல்கள் ஏதும் இல்லாத நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் மட்டும் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தங்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே சிலர் பயன்படுத்துவதாக காஷ்மீர் பண்டிட்களே கூறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
1980களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியாகியுள்ளது.

தி காஷ்மீர் பைல்ஸ்
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்துத்வா அமைப்புகள் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் கேள்வி
ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் 1990களில் காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றம் குறித்து புதிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும் தீவிரவாதமும்தான் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியையும் நான் மன்னிக்கவில்லை என்றும் ஆசாத் கூறினார்.

சந்திரசேகர ராவ்
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு எதிரான அணியில் இணைந்துள்ளார். இதுகுறித்து ani நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசிடம் பொருளாதாரம் குறித்தோ, நீர்ப்பாசனம் குறித்தோ பைல்கள் ஏதும் இல்லாத நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் மட்டும் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தங்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக காஷ்மீர் பண்டிட்களே கூறுவதாகவும் குற்றம் சாட்டியதாக கூறப்பட்டுள்ளது.

யார் பொறுப்பு?
மேலும் தி காஷ்மீர் பைல்ஸ் மத்திய அரசு தனது ஊழியர்களை படம் பார்க்கச் சொல்கிறது. இந்த அரசியல் என்ன வகையானது எனவும், நாட்டில் நிலவும் சூழலுக்கு யார் பொறுப்பு? எனவும் கேசிஆர் கூறினார். சிலர் வாக்குகளுக்காக இதைச் செய்கிறார்கள், எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று காஷ்மீர் பண்டிட்களே சொல்வதாகவும் கேசிஆர் மேலும் கூறினார். மேலும் யாசங்கி சாகுபடி தொடர்பாக தெலுங்கானா அமைச்சர்கள் நாளை புது தில்லிக்குச் சென்று, மத்திய அரசிடம் பேசவுள்ளதாகவும், நாட்டில் ஒரே மாதிரியான உணவு தானியக் கொள்கை இருக்க வேண்டும் என்று கேசிஆர் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications