மாஸ்டர்பிளான்.. சீனா + பாகிஸ்தானுக்கு இந்தியா போட்ட ஸ்கெட்ச்.. எல்லையில் களமிறக்கப்படும் 'அசுரன்'
டெல்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் சுமார் 120 பிரளய் ஏவுகணைகளை நிலை நிறுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. சமீப காலங்களாக சீன எல்லையில் நடைபெற்று வரும் மோதல் சம்பவங்களை தொடர்ந்து இந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதல் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் டோக்லம் பகுதியில் நடந்த மோதல் ஆகியவை இந்திய சீன எல்லையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. எனவே சீன எல்லையில் இந்திய படைகள் முழு பலத்தோடு அனைத்தையும் எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் பாகிஸ்தானுடனான எல்லையில், புதிய பதுங்கு குழிகளை அமைத்தல், டாங்கிகளுக்கான புதிய சாய்வுதளங்களை உருவாக்குதல் போன்ற பணிகளை BSF தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 2,289 கி.மீ தொலைவு எல்லையாக இருக்கிறது. இதில் 192 நீளமுள்ள முன் பகுதியை இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன. இந்த பகுதியில் ஏற்கெனவே 26 கி.மீ நீளத்தில் எல்லையை பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

எல்லையை பலப்படுத்தும் பாதுகாப்புத்துறை
இந்நிலையில் தற்போது மேலும் 33 கி.மீ தொலைவுக்கு பலப்படுத்தும் பணியை BSF செய்து வருகிறது. இந்த பணியில் டிசிபிகளை (ditch-cum-bandhs)உருவாக்குதல், சேதமடைந்திருக்கும் தடுப்பு வேலி கம்பிகளை சரி செய்தல், டாங்கிகள் முன்னோக்கி செல்வதற்கான தடுப்பு கவசங்கள் (morchas) போன்றவை உருவாக்கப்படுகின்றன. அதேபோல இரு நாட்டு எல்லைகளில் சுமார் 120 பிரளய் ஏவுகணைகளை நிலைநிறுத்த ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் எந்தெந்த பகுதியில் எவ்வளவு ஏவுகணைகள் நிலை நிறுத்தப்படும் என்கிற விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.

10 மீட்டருக்கு ஒன்னும் இருக்காது
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரளய் ஏவுகணை எதிரி நாட்டின் பதுங்கு குழிகளையும், டாங்கிகளையும் அழிக்க போதுமானது என்று ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது 150 கி.மீ முதல் 500 கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் சுமார் 10 மீட்டர் அளவிலான இடத்தை தடம் தெரியாமல் அழித்துவிட முடியும். இது பிரஹார், பிருத்வி-2 மற்றும் பிருத்வி-3 ஆகிய ஏவுகணைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வேகம்
மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்க இன்ஃப்ராரெட் மற்றும் தெர்மல் ஸ்கேனர் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 5 டன் எடை கொண்ட இந்த ஏவுகணையானது 500 முதல் 1,000 கி.கி வரையில் வெடி பொருட்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். அதேபோல இந்த ஏவுகணை மணிக்கு சுமார் 2,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதன் சரியான வேகம் குறித்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. தற்போது சீனாவிடம் இதேபோல Dong Feng ரக ஏவுகணைகள் இருக்கின்றன. Dong Feng வரிசையில் குறைந்தபட்சம் 120 கி.மீ தொடங்கி அதிகபட்சம் 15 ஆயிரம் கி.மீ தொலைவு வரை துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் வரை இருக்கின்றன.

பாகிஸ்தானுடன் கைகோர்த்த சீனா
அதேபோல பாகிஸ்தானிடம் Ghaznavi வகை ஏவுகணைகள் இருக்கின்றன. இது அதிகபட்சம் 450 கி.மீ தொலைவு வரை இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் M-11 வகை ஏவுகணைகளும் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால் இந்த வகை ஏவுகணை குறித்து பெரிய அளவில் தகவல்கள் வெளியில் தெரியவில்லை. இது சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கியதாக சொல்லப்படுகிறது. முன்னதாக சீனாவும், பாகிஸ்தான் கைகோர்த்து இந்தியாவுக்கு எதிராக போருக்கு தயாராகி வருகின்றன என ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications