கட்டாய மதமாற்றம் பெரிய பிரச்சனை! நாட்டு பாதுகாப்பிற்கே பாதிப்பை உண்டாக்கும்! உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, நாட்டின் மத சுதந்திரத்தையும், தனிமனித மனசாட்சியையும் கடுமையாக பாதிக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பில்லி சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்திருந்த மனுவை விசாரிக்கையில் நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட கூற்றை கூறியுள்ளது.
மேலும், நாட்டில் மத சுதந்திரம்தான் இருக்கிறது என்றும், கட்டாய மதமாற்றத்திற்கு சுதந்திரம் இல்லையென்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

விசாரணை
நாட்டில் பல்வேறு இடங்களில் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் எனவே கட்டாய மதமாற்றத்துடன் பில்லி சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளையும் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞரும் பாஜகவின் தலைவர்களில் ஒருவருமான அஸ்வினி குமார் உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

ரொட்டியும் கோதுமையும்
அப்போது இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு தரப்பிடம் கேள்வியெழுப்பப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் முறையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், "மக்களை வேறு மதங்களுக்கு மாற்ற அவர்களுக்கு ரொட்டியும், கோதுமையும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதிகளில் மக்கள் பெரும்பாலான அளவில் மக்கள் இவ்வாறு மதமாற்றம் செய்யப்படுகின்றனர்" என்றும் கூறியுள்ளார்.

பிரமாணப் பத்திரம்
அப்போது பேசிய நீதிபதிகள், "கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, நாட்டின் மத சுதந்திரத்தையும், தனிமனித மனசாட்சியையும் கடுமையாக பாதிக்கும். இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஒருவேளை இது உண்மையாக இருந்தால், நாட்டிற்கு மிகத்தீவிரமான பிரச்னை இதுதான். எனவே இது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 22ம் தேதிக்குள் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

ஒத்தி வைப்பு
மனுதாரர் தரப்பில், "இந்த கட்டாய மத மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பின்தங்கியுள்ள மக்கள்தான். இது அரசியலமைப்பின் 14, 21, 25 ஆகிய பிரிவுகளை மீறுவதாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து இவற்றை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனாலும் இந்த கொடுமைக்கு எதிராக அரசு எவ்வித உறுதியான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications