சர்ச்சையை கிளப்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்! உலகில் எந்தெந்த நாடுகள் பின்பற்றுகின்றன தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வழி வகுக்கும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கூறி வந்தனர். இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நேற்று ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரம், தற்போது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இப்படி இருக்கையில், உலகில் எந்தெந்த நாடுகளில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 தினங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்திருந்தது. இதை அமல்படுத்த எந்தக் காலக்கெடுவையும் இக்குழு நிர்ணயிக்கவில்லை.

ஆனால், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், இதை அமல்படுத்த ஒரு செயலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று இக்குழு கூறியிருந்தது.
கடந்த 1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திரப்பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கு ஆகும் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல்களில் கவனம் செலுத்துவது குறைந்து, ஆட்சியிலும் நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பன போன்ற வாதங்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களில் நியாயம் இருந்தாலும், இதுவரை இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை. உண்மையில், தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சினையாகச் சுருக்கிவிட முடியாது.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இப்படி இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் மாறி மாறி இருந்து வருகிறது.
ஆனால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், அதை முதலில் அமல்படுத்திய நாடு இந்தியாவாக இருக்காது. இதற்கு முன்னர் ஏற்கெனவே சில நாடுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றன.
அதாவது தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், பெல்ஜியம், ஜப்பான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் என 7 நாடுகள் இந்த தேர்தல் முறையை பின்பற்றி வருகின்றன.
தென்னாப்பிரிக்கா: இந்நாட்டில் தேசிய, மாகாண மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. தேர்தல் செயல்முறையை சீரமைக்கவும், செலவுகளை குறைக்கவும், வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறை பின்பற்றப்படுகிறது. தவிர, வெவ்வேறு நாட்களில் தேர்தல்களை நடத்தும்போது, மூத்த குடிமக்கள் அழைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தீர்வு கண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து ஜெர்மனி, ஸ்வீடன், பெல்ஜியம், ஜப்பான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பின்பற்றப்படுவதாக, ராம்நாத் கோவிந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications