பற்றி எரியும் ஹரியானா.. “விஷ்வ இந்து பரிஷத்தின் மத வன்முறை”.. நாடாளுமன்றத்தில் விவாதிக்க திருமா மனு
டெல்லி: ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பால் நடத்தப்படும் மதவாத வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கவன ஈர்ப்பு மனு அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "ஹரியானாவில் நடந்த வகுப்புவாத மோதல்களில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், அண்டை மாநிலங்களுக்கும் வன்முறை பரவி வருகிறது. யாத்திரை அமைப்பாளர்கள் ஆயுதங்களை ஏந்தி வந்தது எப்படி? என குருகிராம் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான ராவ் இந்தர்ஜித் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், விஷ்வ இந்து பரிஷத் பேரணிகளில் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய அரசுக்கும் மாநில காவல்துறைக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில், வலதுசாரி தீவிரவாத கும்பல்கள் பால்ராவில் உள்ள முஸ்லிம் கிராம மக்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
பெண்களைக் கூட குறிவைத்துத் தாக்கி உள்ளனர். காவல்துறையினர் அதைத் தடுக்காமல் மௌன சாட்சியாக நின்றுள்ளனர். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக காவல்துறை தானே முன்வந்து எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி 2022 அன்று உத்தரவிட்டும், மத்திய அரசோ, மாநில அரசுகளோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தத் தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஷ்வ இந்து பரிஷத்தின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் உடனடி விவாதத்தை நடத்துவது மிகவும் முக்கியமானது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
“ ஹரியானாவில் விஎச்பி ஆல் நடத்தப்படும் மதவாத வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும்”
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 3, 2023
என இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு மனு அளித்துள்ளேன்.
“ ஹரியானாவில் நடந்த வகுப்புவாத மோதல்களில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கும் வன்முறை பரவி வருகிறது. யாத்ரா… pic.twitter.com/pnXlV9cDIc
ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளில் ஒன்றான விஷ்வ இந்து பரிஷத் ஹரியானாவில் 130 கிமீ தூர பிரஜ் மண்டல் யாத்திரையை மேற்கொண்டது. ஹரியானாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் இந்த யாத்திரை கடக்கும்போது பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரித்தும், போதிய பாதுகாப்பு அளிக்காமல் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனால் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31 ஆம் தேதி இரவு வன்முறை வெடித்தது. இது குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. இதுவரை 5க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளார்கள். ஏராளமான வீடுகள், கடைகள், மசூதிகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு இருக்கின்றன. நுஹ் பகுதியில் மசூதி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டு அதில் இருந்த 19 வயது இமாம் 80 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications