இது என்ன ரயில்வே பிளாட்பாரமா? நினைத்த இடத்தில் ஏற? வக்கீலை கடிந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், தனது பொதுநலமனுவை எப்போது விசாரிப்பீர்கள் என வழக்கறிஞர் ஒருவர் திடீரென எழுந்து கேட்டதால் தலைமை நீதிபதி அதிருப்தி அடைந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வழக்குகளை விசாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென எழுந்து நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பாக பொதுநல மனுவை தான் தாக்கல் செய்து இருப்பதாகவும் அந்த மனு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். மனு விசாரணைக்கு பட்டியலிப்படவில்லை என்றும் கூறினார்.

வழக்கறிஞர் திடீரென எழுந்து இப்படி கோரிக்கை வைத்ததை பார்த்து அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உடனடியாக வழக்கறிஞருக்கு அறிவுரைகளை கூறினார். நீதிபதி கூறும் போது, "எந்த ரயிலில் ஏறி வேண்டுமானாலும் செல்லலாம் என நினைக்க இது ஒன்றும் ரயில்வே பிளாட்பார்ம் இல்லை. நீதிமன்றத்தில் எப்படி பேச வேண்டும். விதிமுறைகள் என்ன என்பது பற்றி சீனியர் வழக்கறிஞர்களிடம் பேசுங்கள்.
நீங்கள் எங்கு ஆஜராவீர்கள்?: நீங்கள் ஒருவர் வழக்கறிஞராக இருக்கிறீர்கள். வழக்குகளை எப்படி முறையிட வேண்டும் என்று நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்" என்றார். ஆனாலும் விடாத அந்த வழக்கறிஞரோ, தான் நீதித்துறைக்கு எதிரானவன் இல்லை. ஆனால், மேம்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்" என்றார். உடனே குறுக்கிட்ட தலைமை நீதிபதி வழக்கமாக நீங்கள் எங்கு ஆஜராவீர்கள் என்று கேட்ட்டார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் தான் ஆஜராவேன் என்று கூறினார். இதையடுத்து, பேசிய தலைமை நீதிபதி, நீங்கள் ஏன் மூத்த வழக்கறிஞர்களுடன் பணியாற்றக் கூடாது. நீதிமன்ற அறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் உங்களுக்கு சொல்லித்தருவார் என்று கூறினார். நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அடிக்கடி தலைமை நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.
23 ஆண்டுகால பணியில்: இந்த மாத துவக்கத்தில், நீதிமன்றத்தில் உரக்க பேசி வாக்கு வாதம் செய்த வழக்கறிஞரை தலைமை நீதிபதி கடுமையாக கடிந்து கொண்டார். வாக்கு வாதம் செய்த அந்த வழக்கறிஞருக்கு அட்வைஸ் கொடுத்த தலைமை நீதிபதி, "உங்கள் குரலை உயர்த்தி பேசுவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது. வழக்கமாக நீங்கள் எங்கு ஆஜராவீர்கள். எனது 23 ஆண்டுகால பணிக்காலத்தில் இப்படி யாரும் நடந்து கொண்டது இல்லை. நாட்டின் முதன்மை நீதிமன்றத்தில் இப்படித்தான் நீங்கள் வாதாடுவீர்களா" என சற்று காட்டமாகவே அறிவுரை வழங்கியிருந்தார்.












Click it and Unblock the Notifications