உலக கோப்பையில் பாக்., வெற்றி..! கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீர் மாணவர்கள் கைது!
டெல்லி: இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக சட்டம் பாயும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வெளியிடப்பட்டுள்ளது.
துபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புகைப்படங்கள்
இதை இந்தியாவில் சிலர் கொண்டாடியதாக சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் சுற்றி வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு தேச விரோத முழக்கங்களை எழுப்பியதற்காக மூன்று காஷ்மீர் மாணவர்கள் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் கைது செய்யப்பட்டனர். பாஜக யுவமோர்ச்சா தலைவர் கௌரவ் ரஜாவத் அளித்த புகாரின் பேரில் மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல பிரிவுகள்
ஐபிசி பிரிவு 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் ஐபிசி 505 (எந்தவொரு வதந்தி/அறிக்கையை வெளியிட்டுவது/பரபரப்புவது) பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66F (சைபர் பயங்கரவாதத்திற்கான தண்டனை) கூட அவர்கள் மீது பாய்ந்துள்ளது.

ஆக்ரா கல்லூரி மாணவர்கள்
ஆக்ராவில் உள்ள RBS இன்ஜினியரிங் கல்லூரியில்தான் 3 மாணவர்களும் படித்து வந்தனர். அவர்களை இடை நீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாக மொத்தம் ஐந்து மாவட்டங்களில் ஏழு பேர் மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தேசத் துரோகம்
உத்தரபிரதேசத்தில் 7 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ள இந்த சூழ்நிலையில்தான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியை யாராவது கொண்டாடினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications