சரணம் ஐயப்பா.. களைகட்டியது சபரிமலை- 2 நாட்களில் 83,429 பக்தர்கள் தரிசனம்- இலங்கையிலும் விரதம்!
டெல்லி: கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. கடந்த 15, 16 ஆகிய இரு நாட்களில் மட்டும் 83,429 பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இனிவரும் நாட்களில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் தமிழ் மன்னர்களான சேரர்கள் வழிபாடு செய்த மலைகள், காடுகள் சூழ்ந்த அயிரை மலை என்பதுதான் தற்போதைய ஐயப்பனின் சபரிமலை. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டின் பல்வேறு கால கட்டங்களில் திறக்கப்பட்டாலும் மகரவிளக்கு மற்றும் மண்டலபூஜை காலம்தான் பிரசித்தி பெற்றது.

மகரவிளக்கு, மண்டலபூஜை காலத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். ஒரு மண்டலம் எனப்படுகிற 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய செல்கின்றனர். சபரிமலைக்கு செல்வதற்கு 3 பாதைகள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. பெருமளவிலான பக்தர்கள், பம்பையில் இருந்து மலையேறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெருவழிப் பாதை என்கிற மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம். புல்மேடு வழியாகவும் சபரிமலையை சென்றடைகின்றனர் பக்தர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை முதல் நாளான நவம்பர் 16-ந் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். முன்கூட்டியே மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

நவம்பர் 15-ந் தேதி முதல் நேற்று மாலை வரை சபரிமலைக்கு 83,429 பக்தர்கள் சென்றுள்ளனர். ஒரு மணிநேரத்துக்கு 3,000 பக்தர்கள் வீதம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு 16 மணிநேரமாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமன்றி தமிழர்கள் வாழும் மாநிலங்கள், நாடுகளிலும் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இலங்கையின் மலையகத்திலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications