இபிஎஸ் அணியின் ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு- இதுவரை நடந்தது என்ன?
அதிமுக பொதுக்குழு வழக்கில் இதுவரை நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி ஜூலை 11-ல் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை இவ்வழக்கு தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:

2022
ஜூன் 22: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஜூன் 23 பொதுக்குழுவில் தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது; தன்னிச்சையான இந்த போக்கினால் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரினார் ஓபிஎஸ். ஆனால் ஓபிஎஸ் கோரிக்கையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நிராகரித்து உத்தரவிட்டார்.
ஜூன் 22: நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் பெஞ்ச் நள்ளிரவில் விசாரணையை தொடங்கி அதிகாலை வரை நடத்தியது. இதன்பின்னர் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
ஜூன் 23: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக இபிஎஸ் தரப்பு தெரிவித்தது. ஜூலை 11-ல் புதிய பொதுக்குழு கூட்டப்படும் என தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதனால் பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.
ஜூலை 7: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை இல்லை என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்தது.
ஜூலை 8: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு நடத்த அனுமதிப்பது தொடர்பாக ஜூலை 11-ந் தேதி காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
ஜூலை 11: அதிமுக பொதுக்குழு நடத்த தடை கோரிய ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து மனு டிஸ்மிஸ். அதிமுக பொதுக்குழுவை கூட்ட அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜூலை 11 : அதிமுக இபிஎஸ் அணியினர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. அதே நாளில் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு அள்ளிச் சென்றது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பும் மனு தாக்கல் செய்தன. ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஜூலை 20: அதிமுக அலுவலக சீல் உடைக்கப்பட்டு சாவியை இபிஎஸ் தரப்பில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்துக்கு தொண்டர்கள் செல்ல ஒரு மாத தடை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5: ஜூலை 11 பொதுக்குழு வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ் 17: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் செல்லாது; ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக இபிஎஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்தது.
செப். 2: நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் ஜூலை 11 பொதுக்குழு செல்லும்; அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
செப்.30: ஓபிஎஸ் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இருதரப்பு வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.
2023
ஜன 11: ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.
ஜன 30: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
பிப்.2: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் அலுவலரே முடிவு செய்வார் எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
பிப். 3: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ்ஸை உளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வ் வேண்டும்; இந்த விவரத்தை அவைத் தலைவர் தமிழ் மகன் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். இந்த உத்தரவு, அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கு தொடர்புடையது அல்ல என கூறியது.
பிப். 22: அதிமுக பொதுக்குழு வழக்கில் பிப்.23-ல் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
பிப்.23: இபிஎஸ் அணியின் ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.












Click it and Unblock the Notifications