"மிக விரைவில்.. நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்" மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு
டெல்லி: நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், புதிய தொழில்நுட்பம் வாயிலாக சுங்கக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
Recommended Video
மிகவும் சிறப்பாக பணியாற்றும் மத்திய அமைச்சர்களில் ஒருவர் என எதிர்க்கட்சிகளால் கூட அடிக்கடி பாராட்டப்படுவர் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது பல்வேறு துணைக்கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினர்.

எம்.பிக்கள் கவலை
தேசிய நெடுஞ்சாலைகளில் நகர எல்லைக்குள்ளாகவே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால், உள்ளூர் மக்கள் கூட சுங்க வரி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் எம்.பிக்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய நிதின் கட்காரி, ''2014 க்கு முன்பாக அதாவது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இந்த பிரச்சினை எழுந்தது. அப்போதுதான் நகர எல்லைக்குள்ளும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அனைவரும் சுங்க வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகினர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, சட்டவிரோதமானதும் கூட. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கண்டிப்பாக காணப்படும்" என்றார்.

நான் தான் சுங்க வரியின் தந்தை
மேலும், இந்தியாவில் சுங்க வரியின் தந்தை நான் என்று தெரிவித்த நிதின் கட்காரி, அதற்கான விளக்கத்தையும் அளித்து அவையை கலகலப்பாக்கினார். இது தொடர்பாக நிதின் கட்காரி கூறுகையில், "நாட்டில் இதுபோன்ற சுங்கச்சாவடி முறையை முதல் முறையாக துவக்கி வைத்தது நான் தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது 1990 களில், தானே நகரில் BOT ( கட்டமைப்பு - செயல்படுத்துதல்- பரிமாற்றம்) திட்டத்தின் கீழ் முதல் முறையாக சுங்க வரி வசூலிக்கும் முறையை தொடங்கினேன்" என்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை நிதின் கட்காரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் மும்பை -புனே விரைவுச்சாலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்
தொடர்ந்து நிதின் கட்காரி கூறியதாவது:- நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும். இந்த திட்டத்தின் மூலம் இனிமேல் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை மறையும். இதேபோல் சுங்கக்கட்டணம் வசூல் செய்யவும் இனி ஆட்கள் இருக்கமாட்டாங்க. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சிரமமின்றி தடையில்லா பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் அரசுக்கு இதனால் வருமானம் வராமல் போகாது. இதற்காக வெறு வழியில் சுங்க கட்டணம் வசூலிக்க அரசு 2 வழிகளில் பரிசீலனை செய்து வருகிறது. ஒன்று செயற்கைகோள் முறை. மற்றொன்று நம்பர் பிளேட் முறை.

ஒரு மாதத்துக்குள் முடிவு
செயற்கைக்கோள் முறையில் என்பது வாகனங்களில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ். கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் பெற்றுக்கொள்ளும் முறை. நம்பர் பிளேட் முறை என்பது, பழைய நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட்டு கணினி பயன்பாட்டு அமைப்பு வசதியுடன் கூடிய நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மென்பொருளைப் பயன்படுத்தி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடங்கும் பாயிண்டில் இருந்து பதிவு நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும் வரை பதிவு செய்யப்படும். இதன் மூலம் சரியான தொகை மட்டுமே வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்படும். ஆனால் இந்த 2 வசதிகளில் எது பயன்பாட்டும் வரும் என நாங்கள் முடிவு செய்யவில்லை. எனினும் ஒரு மாதத்துக்குள் இது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications