தடுப்பூசி ஸ்டாக் இல்லை.. கைவிரித்த மாநிலங்கள்.. 18+ வயதினருக்கு.. இன்று தடுப்பூசி போடுவதில் சிக்கல்
டெல்லி: நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போதிய தடுப்பூசி இல்லாததால் பல மாநில அரசுகள் இன்று தடுப்பூசி போட முடியாது என்று கைவிரித்துள்ளன.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மக்களை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தினசரி உயிரிழப்பு 3,500-ஐ தாண்டி செல்கிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை.

கொரோனாவை விரட்ட தடுப்பூசி
மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை ஆகியவை காரணமாக நாடே திண்டாடி வருகிறது. கொரோனாவை விரட்டுவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன்பதிவு தொடங்கியது
இதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இதற்காக கோ வின் செயலி, ஆரோக்கிய சேது செயலியில் கடந்த 28-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது.

மாநிலங்களுக்கு சிக்கல்
முதல் நாளில் மட்டும் 1 கோடிக்கும் மேல் முன்பதிவு செய்தனர். நேற்று மாலை நிலவரப்படி, நாடு முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்று நாடு முழுவதும் திட்டமிட்டபடி 18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில் பல்வேறு மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசோ, உற்பத்தி நிறுவனங்களோ இன்னும் அனுப்பி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மறுப்பு தெரிவித்த மாநிலங்கள்
தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் இன்று தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியாது என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டன. குஜராத் மாநிலம் மட்டும் 10 மாவட்டங்களில் இன்று முதல் தடுப்பூசி போடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

காரணம் என்ன?
மத்திய அரசு முறைப்படி அறிவித்த போதிலும், பல மாநில அரசுகள் இன்று தடுப்பூசி போட முடியாது என்று கைவிரித்துள்ளதால் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாமல் சரியாக திட்டமிடாமல் மத்திய அரசு அவசர கதியில் அறிவித்ததே இத்தகைய குளறுபடிகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று வரை மொத்தம் 15.22 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications