நம்புங்க! எனக்கு தான் திருமணமாகிட்டே! அப்புறம் எப்படி கோபம் வரும்! ஜெகதீப் தன்கரால் ஒரே சிரிப்பலை
டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் அதனை நாடாளுமன்ற இரு சபைகளின் தலைவர்கள் இன்னும் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று மல்லிகார்ஜூன கார்கே சொன்ன ஒற்றை வார்த்தையை கேட்டவுடன் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் கூறிய பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இதற்கிடையே தான் முந்தைய நாளில் மணிப்பூர் வன்முறையில் 2 பழங்குடியினத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என லோக்சபா (மக்களவை) மற்றும் ராஜ்யசபா(மாநிலங்களை) என 2 சபைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சபை நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இதற்கு இன்னும் 2 சபைகளின் தலைவர்களும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கி வருகின்றன.
இன்று 11நாள் கூட்டம் நடந்தது. அப்போதும் எதிர்க்கட்சிகள் இரு சபைகளிலும் வழக்கம்போல் மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதிக்க வேண்டும் என்றனர். இதனால் இரு சபைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இன்று காலையில் ராஜ்யசபாவில் அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறிய வார்த்தைகளால் ஒட்டுமொத்த சபையும் சிரிப்பலையில் மூழ்கியது.
அதாவது ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது நாடாளுமன்ற விதியான 267 ன் கீழ் அனைத்து சபை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அவசர பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக ஜெகதீப் தன்கரை பார்த்து மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அப்போது மல்லிகார்ஜூன கார்கே ‛‛நான் உங்களிடம் இதுதொடர்பாக பேசியுள்ளேன். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உரிய காரணத்தையும் கூறியிருக்கிறேன். நேற்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். இன்றும் நான் உங்களிடம் அதனை வலியுறுத்துகிறேன். இதனால் நீங்கள் கோபமடையலாம்'' என்றார்.
இந்த வேளையில் ஜெகதீப் தன்கர் சிரித்தபடியே, ‛‛நான் திருமணம் ஆனவன். எனக்கு திருமணம் முடிந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிவட்டது. நான் ஒருபோதும் கோபப்பட மாட்டேன். என்னை நம்புங்கள்'' என கூறினார். இதை கேட்டவுடன் மல்லிகார்ஜூன கார்கே உள்பட சபையில் இருந்த ராஜ்யசபா எம்பிக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரும் சிரித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications