ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி தேர்வுகள் நடைபெறுவது எப்போது? புதிய தேதியை வெளியிட்டது தேர்வு முகமை
டெல்லி: பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறுவதாக இருந்த யுஜிசி நெட் தேர்வு, தேர்வர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு எனப்படும் யுஜிசியால் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளுக்கான தகுதி தேர்வான யுஜிசி நெட் தேர்வு ஜனவரி 15 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை நாட்களில் யுஜிசி நெட் தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 3 தினங்கள் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் தை 2 ஆம் தேதியன்று யுஜிசி நேட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதனை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

தேதியை மாற்ற வேண்டும்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் 4 நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது. அப்போதுதான், அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது.
புதிய தேதி அறிவிப்பு
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். தேர்வர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நிலையில் தேர்வு நடைபெறும் புதிய தேதியை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதன்படி, யுஜிசி தேர்வுகள் வரும் ஜனவரி 21 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி தேர்வு:
கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பி.எச்.டி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்குத் தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாற்றும் டிசம்பர் என இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படும்.
முதுகலை பட்டம் முடித்தவர்கள் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியாக நெட் தேர்வு முதலில் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் முனைவர் படிப்பிற்கும் நெட் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. பி.எச்.டி பட்டம் படிப்போர் ஜேஆர்எஃப் எனப்படும் கல்வி உதவித் தொகை பெறவும் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். எனவே இந்த தேர்வை பலரும் ஆர்வமாக எழுதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications