தேடப்படும் பாலியல் குற்றவாளி நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்பிக்கள் விருந்து தந்தனரா?
டெல்லி: இந்தியாவில் தேடப்படும் பாலியல் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் தீபாவளி விருந்து கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள நித்தியானந்தா வழக்கறிஞர் இந்த தகவல் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை எனப்படும் நடைபாதையில் குடில் அமைத்து ஆசிரமம் அமைத்தவர் நித்தியானந்தா. ஊடக வெளிச்சங்களில் நித்தியானந்தா புகழ் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கர்நாடகாவின் பிடதி, குஜராத்தின் அகமதாபாத் என பல இடங்களிலும் ஆசிரம கிளைகளை உருவாக்கினார். நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இன்றளவும் சிறுவர், சிறுமியர்தான் பெரும்பாலும் சாமியார்களாக வலம் வருகின்றனர்.

சர்ச்சை சாமியார்
இந்த நிலையில் பகலில் சாமியாராக வலம் வரும் நித்தியானந்தா இரவில் நடிகைகளுடன் சல்லாபிக்கும் காட்சிகள் ஊடகங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நித்தியானந்தா- நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் டிவி மீடியாக்களில் ஒளிபரப்பாகின. அன்று முதல் நித்தியானந்தாவின் இன்னொரு முகம் ஒவ்வொரு விவகாரத்திலும் அம்பலமாகி வந்தது.

தப்பி ஓட்டம்
நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் வரிசை கட்டின. இதனால் போலீசார் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இமாச்சல பிரதேசத்துக்கு தப்பி ஓடினார் நித்தியானந்தா. அங்கு போலீசார் சுற்றி வளைத்து நித்தியானந்தாவை கைது செய்தது. பலாத்கார வழக்கு உள்ளிட்டவைகளின் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு ஓடிவிட்டார் நித்தியானந்தா.

கைலாசா அதிபராக
இன்றளவும் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் கரீபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அதன் அதிபராக தன்னை பிரகடனம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கிறார் நித்தியானந்தா. இந்த சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் ,இந்திய நிகழ்வுகள் குறித்து நித்தியானந்தா கருத்துகளையும் கூறி வருகிறார்.

இங்கிலாந்தில் விருந்தா?
இதன் உச்சமாக, கைலாசா தேசத்துக்காக பல்வேறு நாடுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை எனவும் விளம்பரம் தரப்பட்டு வருகிறது. நித்தியானந்தாவின் இந்த அட்ராசிட்டிக்கு எப்போது முடிவுதான் என தெரியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் தீபாவளியின் போது லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் நித்தியானந்தாவுக்கு விருந்து கொடுத்தனர் என்கிறது ஒரு ஊடக செய்தி. இங்கிலாந்து ஊடகத்தின் இந்த செய்தியில், இந்தியாவில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவுக்கு இங்கிலாந்து எம்பிக்கள் எப்படி விருந்து கொடுக்கலாம் எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நித்தியானந்தாவின் இங்கிலாந்து வழக்கறிஞர் இதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications