கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்த பிற மாநில நலன்களை காவு கொடுப்பதா? பட்ஜெட் மீது ராகுல் காந்தி கோபம்!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில் அந்த கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; பிற மாநில மக்களின் நலன்களை சமரசம் செய்து கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்திருக்கிறது மத்திய பட்ஜெட் எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆனாலும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் அதீதமான நிதி ஒதுக்கீடு அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது.

இதனால் தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொந்தளித்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்திலேயே இம்மாநிலங்களின் எம்பிக்கள் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது தமிழகத்திலும் கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்த, பிற மாநில மக்களின் நலன்களை சமரசம் செய்து கொண்டு கூடுதல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் முந்தைய மத்திய பட்ஜெட்டுகளில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகள் ஆகியவற்றையும் தற்போதைய மத்திய பட்ஜெட்டில் காப்பி அடித்து இடம் பெறச் செய்துள்ளனர். அம்பானி, அதானிகளுக்குதான் இந்த பட்ஜெட் (AA). இந்த நாட்டின் சாதாரண குடிமகன்களுக்கு மத்திய பட்ஜெட்டில் உருப்படியான எந்த ஒரு அறிவிப்புமே இடம் பெறவும் இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications