காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இருந்து அப்படி என்னதான் காப்பி அடித்தது மத்திய பட்ஜெட் தெரியுமா?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத்தான் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துதான் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறச் செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 'தொழிற் பயிற்சி பழகுநர்’ மாணவர்கள், இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட உறுதியைத்தான் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பாக இடம் பெறச் செய்துள்ளனர் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் முன்னரே பேசு பொருளாக இருந்ததுதான் தொழிற் பயிற்சி பழகுநர் படிப்பின் போது வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் திட்டம். இது ஜெர்மனியில் நடைமுறையில் உள்ளது. ஜெர்மன் மாடலைத்தான் இந்தியாவில் செயல்படுத்துவோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னரே ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில், 25 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு டிப்ளமோதாரர் அல்லது கல்லூரி பட்டதாரிகளுக்கு தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு ஆண்டு தொழிற் பழகுநர் பயிற்சியை வழங்குவதற்கான சட்டம் கொண்டுவரப்படும். அப்படி தொழிற் பழகுநர் பயிற்சி பெறக் கூடியவர்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கையிலெடுக்கும் "பிரம்மாஸ்திரம்!" ஜெர்மன் மாடல் வாக்குறுதி தெரியுமா?
சரி தற்போதைய மத்திய பட்ஜெட்டில் இதேபோல சொல்லப்பட்டுள்ளதா?
“பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்குவதற்கு அரசு விரிவான திட்டத்தை தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் ஒருகோடி இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்குவதாக இந்த திட்டம் இருக்கும் என்று தமது பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்தார். நிகழ்நிலை வணிகச் சூழல், மாறுபட்ட தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் 12 மாத பயிற்சி பெறுவார்கள். இந்த இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6,000 என்பதுடன் மாதந்தோறும் அனுபவ பயிற்சிப் படியாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவு ஏற்பதுடன் அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து செலவிடும் என்று எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் கூறினார்.
அதாவது காங்கிரஸ் கட்சி தொழிற் பழகுநர் பயிற்சியாளர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவோம் என்று அறிவித்ததையே மத்திய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்துள்ளனர் என்பதுதான் காங்கிரஸ் தலைவர்களின் வாதம்.














Click it and Unblock the Notifications