பாதுகாப்பு துறையில் உள்நாட்டு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்: குடியரசு தலைவர் புகழாரம்
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு துறையில் தொடர்ந்து ஏராளமான திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றி இந்த பட்ஜெட் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கல்வி, மருத்துவம் என ஒவ்வொரு துறை குறித்தும் கடந்த ஆண்டில் மத்திய அரசு சாதித்தது குறித்து விளக்கினார். அதேபோல் நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்களும் அவரது உரையில் இடம்பெற்றன.

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு துறை குறித்தும் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அப்போது, ''நாட்டின் பாதுகாப்பு துறையில் தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.
அதேபோல், 'உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தேஜஸ் போர் விமானம், சர்வதேச தரத்துக்கு இணையானது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள, தேஜஸ் மார்க் - 1ஏ ரக போர் விமானங்களை, நம் விமானப் படைக்கு, 73 எண்ணிக்கையில் வாங்க, 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுஉள்ளது.
அதைத் தொடர்ந்து, அதைவிட அதிக அதிநவீன வசதிகள் உடைய, தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானத்தை தயாரிக்க உள்ளோம்' என கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர், ''தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது பெருமையான விஷயம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications